விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: சீமான்!

கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வு கிடைக்க தமிழ்நாடு அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.

இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-

திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள காடா துணி உற்பத்தி செய்யும் இலட்சக்கணக்கான விசைத்தறியாளர்களுக்கு, ஜவுளி உற்பத்தியாளர்களிடம் இருந்து உரிய ஊதிய உயர்வினைப் பெற்றுக்கொடுக்காமல் காலம் தாழ்த்தி வரும் தமிழ்நாடு அரசின் செயல் வன்மையான கண்டனத்திற்குரியது.

கொங்கு மண்டலத்தில் வேளாண்மைக்கு அடுத்தபடியாக பல இலட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது விசைத்தறி தொழிலாகும். அரசு ஏற்படுத்திய ஒப்பந்தப்படி மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு வழங்கப்பட வேண்டும். ஆனால், கடந்த 2022ஆம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட ஒப்பந்தத்தின் படியான கூலி உயர்வைக்கூட விசைத்தறியாளர்களுக்கு ஜவுளி உற்பத்தியாளர்கள் இன்றளவும் வழங்க மறுப்பது மிகுந்த வேதனைக்குரியது.

பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும், புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படாததால் விசைத்தறியாளர்கள் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு தொடர் போராட்டங்களில் ஈடுபடும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். இது தொடர்பாக, தமிழ்நாடு அரசிடம் விசைத்தறியாளர்கள் பலமுறை மனு கொடுத்தும் உரிய கூலி உயர்வு பெற்றுத்தர எவ்வித ஆக்கப்பூர்வமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் பல்லாயிரக்கணக்கான விசைத்தறியாளர்கள் வேலைவாய்ப்பினை இழந்து தவித்து வருவதோடு, அவர்களது குடும்பங்கள் வறுமையில் வாடும் கொடுஞ்சூழல் ஏற்பட்டுள்ளது. குறைவான கூலி காரணமாக 50% விசைத்தறியாளர்கள் தறித்தொழிலைக் கைவிட்டு வேறு வேலைக்குச் சென்றுவிட்டதால், உற்பத்தி பெருமளவு பாதிக்கப்பட்டு பல நூறு கோடி ரூபாய் நட்டமாகி, விசைத்தறி தொழிலே முடங்கும் பேராபத்து ஏற்பட்டுள்ளது. கடின உடல் உழைப்பு புரியும் விசைத்தறியாளர்கள் வாழ்வு நசிந்துவிடாமல் காக்க வேண்டியது தமிழ்நாடு அரசின் மிகப்பெரிய பொறுப்பும், கடமையுமாகும்.

அதிநவீன விசைத்தறி இயந்திரங்களின் தொழில் போட்டியிலிருந்து கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட விசைத்தறியாளர்களைக் காப்பாற்ற, இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசு உடனடியாக விசைத்தறிக்கு ரக ஒதுக்கீட்டு முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்நாடு அரசு ஜவுளி உற்பத்தியாளர்களிடம் விரைந்து பேச்சுவார்த்தை நடத்தி, விசைத்தறியாளர்களுக்கு உரிய கூலி உயர்வினை வழங்க புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

மேலும், விசைத்தறியாளர்கள் தங்கள் தறி எந்திரங்களை எடைக்கு விற்கும் பரிதாபமான நிலையைத் தடுக்க, மின் கட்டண உயர்விலிருந்து விலக்கு அளிப்பதோடு, தற்போது நடைமுறையில் உள்ள விலையில்லா மின்சாரத்தின் அளவை அதிகரிக்க வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசைக் கேட்டுக்கொள்கிறேன்.

தங்களின் நியாயமான கோரிக்கையை வலியுறுத்தி கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி நெசவாளர் பெருமக்கள் முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தம்முடைய முழுமையான ஆதரவினை அளித்து, கோரிக்கை வெல்லத் துணைநிற்கும் என்றும் தெரிவித்துக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.