வக்பு சட்ட திருத்த மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு நாடாளுமன்றத்தில் எழுந்திருக்கிறது. இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய விசிக தலைவரும் மக்களவை உறுப்பினருமான திருமாவளவன், “இந்த மசோதா இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல தேசத்திற்கே எதிரானது” என்று கூறியுள்ளார்.
இது தொடர்பாக திருமாவளவன் பேசியதாவது:-
வக்பு திருத்தச் சட்ட மசோதாவை முற்றாக நான் எதிர்க்கிறேன். இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது. அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரானது. ஆகவே இந்த சட்டத்தை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிக வன்மையாக எதிர்க்கிறேன்.
இந்த சட்ட மசோதா இஸ்லாமியர்களுக்கான சொத்துக்களை முற்றாக அபகரிப்பதற்கான ஒரு சதி முயற்சியாகவே தெரிகிறது. இஸ்லாமியர்கள் இஸ்லாமியர்களின் நலன்களுக்காக உருவாக்கிக் கொண்ட வக்பு சொத்து, இஸ்லாமியர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் நீதியாகும். ஆனால், அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கிற நிர்வாக குழுவில் இஸ்லாமியர் அல்லாதவர்களை வாரியத்திலே் 11 பேரில் 7 பேரையும், இஸ்லாமியர் அல்லாதவர்கள் என சென்ட்ரல் கவுன்சில் என்கிற அகில இந்திய அளவிலான அவையில் 22 பேரில் 12 பேரையும் நியமித்துக் கொள்வதற்காக வாய்ப்பை இந்த சட்ட மசோதா வழங்குகிறது. இது எந்த வகையிலான நீதியாக இருக்க முடியும்?
இஸ்லாமியர்கள் மீதான உங்கள் வெறுப்பு அரசியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பாசிச தாக்குதலாக தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே சிஏஏ சட்டத்தை கொண்டு வந்தீர்கள். ஏற்கனவே பாபர் மசூதியை இடித்தீர்கள். ஏற்கனவே ஜம்மு காஷ்மீரை சிதைத்தீர்கள். இன்றைக்கு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியலை நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது வலதுசாரி பெரும்பான்மைவாத வாசிசத் தாக்குதல் என்று சுட்டிக்காட்டி, இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
மேலும் இஸ்லாமிய சமூகத்தினரின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஆகா காணிகளுக்கு தனி வக்பு வாரியம், சியா முஸ்லீம்களுக்கு தனி வக்பு வாரியம், போரா முஸ்லிம்களுக்கு தனி வக்பு வாரியம் என்றும் நீங்கள் அறிவித்திருப்பது மிக மோசமான பாசிச தாக்குதல். எப்படி இந்துக்களை சாதி பெருமிதம் பேசி கூறு படுத்துகிறீர்களோ, குறிப்பாக பட்டியலின மக்களை தனித்தனி குழுக்களாக உடைத்திருக்கிறீர்களோ, அதுபோல இன்றைக்கு இஸ்லாமிய சமூகத்தையும் பிளவுப்படுத்தும் பிரிவினைவாதத்தை உயர்த்தி பிடிக்கிறீர்கள். இஸ்லாமியர்களுக்கு எதிராக சிறுபான்மை சமூகமான பௌத்த மதத்தை சேர்ந்த ரிஜிஜு என்கிற அமைச்சரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். அதுபோல இஸ்லாமியர்களை இஸ்லாமியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சிறுபான்மைச் சமூகத்தைச் சார்ந்த அமைச்சரை பயன்படுத்துவது வன்மையாக கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் பேசினார்.