மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்தும் நீடிப்பதும் ஏன்?: கனிமொழி!

மணிப்பூர் இன மோதல்கள் குறித்து நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் அதிகாலை 2 மணிக்கு விவாதம் நடத்தியதற்கு திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி எம்பி கடும் கண்டனம் தெரிவித்தார்.

லோக்சபாவில் இன்று அதிகாலை 2 மணிக்கு மணிப்பூர் வன்முறைகள் குறித்த விவாதத்தின் போது கனிமொழி எம்பி பேசியதாவது:-

நாடாளுமன்றத்தில் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என்று பலமுறை வலியுறுத்தி இருந்தோம். ஆனால் தற்போதுதான் மணிப்பூர் வன்முறைகள் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போது மணி அதிகாலை 2 மணி. தற்போதுதான் மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள்.. இதுதான் மணிப்பூர் மக்கள் மீது உங்களுக்கு இருக்கும் அக்கறையை காட்டுகிறது. இதுதானா மணிப்பூர் பிரச்சனையை பற்றி விவாதிப்பதற்கான நேரம்? இது மிக மோசமான செயல். மணிப்பூர் மாநில வன்முறைகளில் இதுவரை 260-க்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர். சொந்த வாழ்விடங்களில் இருந்து 67,000 பேர் இடம் பெயர்ந்துள்ளனர்; 5,000-க்கும் அதிகமான வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த சபையில் மணிப்பூர் தாய் ஒருவரின் துயரத்தை பதிவு செய்கிறேன். முகாமில் இருந்த தாய் ஒருவர் தமது மகன் நாள்தோறும் வருவாரா? என காத்திருந்தார். மகன் வராமலேயே போனதால், உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? என்பதையாவது சொல்லுங்கள் என கேட்டுக் கொண்டே இருந்தார்.. இப்படி பல ஆயிரம் தாய்மார்களின் கண்ணீரை சுமந்தபடி நிற்கிறது மணிப்பூர். மணிப்பூர் மாநிலத்தில் அமைதி திரும்புவதற்கு எந்த ஒரு நடவடிக்கையையும் மத்திய அரசு எடுக்கவே இல்லை. அந்த மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வரே வன்முறையை தூண்டிவிட்டது மிக மோசமான செயல். வன்முறையில் ஈடுபடுகிற போராட்டக்காரர்களின் கைகளில் துப்பாக்கிகள் எப்படி கிடைத்தன? இதற்கு யார்தான் பொறுப்பு? மணிப்பூர் வீதிகளில் 2 பெண்கள் நிர்வாணமாக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட கொடுமைக்கு யார்தான் பொறுப்பு ஏற்பதாம்?

மணிப்பூரில் இயல்பு நிலை திரும்பிவிடும்; பொதுமக்கள் சுதந்திரமாக நடமாட முடியும் என அறிவித்தவர் உள்துறை அமைச்சர் அமித்ஷா. ஆனால் அப்படி அமித்ஷா அறிவிப்புக்கு பின்னர்தான் 103 பேர் கொல்லப்பட்டுள்ளனர். 16 பேர் படுகாயம் அடைந்திருக்கின்றனர். மணிப்பூரில் ஜனாதிபதி ஆட்சி தொடர்ந்தும் நீடிப்பதும் ஏன்? மணிப்பூரில் இயல்பு நிலை, அமைதி திரும்ப வேண்டும்; அம்மாநிலத்தில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, பிரிவினைவாத நடவடிக்கைகளில் ஈடுபடாத ஒரு அரசு அமைய வேண்டும். இவ்வாறு கனிமொழி எம்பி பேசினார்.