தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் மொத்தம் 1299 சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. இந்த நிலையில் 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து மாற்று அறிவிப்பை வெளியிட வேண்டும் என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு அரசு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ( டிஎன்எஸ்யுஆர்பி) தமிழகத்தில் காவலர் தீயணைப்பு துறை உள்ளிட்ட சீருடை பணியாளர்களை தேர்வு செய்து வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாடு சீருடை தேர்வு வாரியத்தின் சார்பில் காவல் சார்பு ஆய்வாளர் ( தாலுகா மற்றும் ஆயுதப்படை) பதவிகளுக்கான நேரடி தேர்வு 2025 அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இணைய வழி விண்ணப்பத்தினை வரவேற்றுள்ளது. இணையவழி விண்ணப்பம் 07.04.2025ஆம் ஆண்டு தொடங்கும் நிலையில் கடைசி தேதியாக 03.05.2025 நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. இணையவழியில் சமர்ப்பித்த விண்ணப்பத்தை திருத்தம் செய்ய 13.5.2025 வரை கால அவகாசம் வழங்கப்படுகிறது. எழுத்து தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
காவல் சார்பு ஆய்வாளர்கள் ( தாலுகா) பதவிக்கு 654 ஆண்கள். 279 பெண்களை மட்டும் 933 காலி பணியிடங்களும், ஆயுதப்படை காவல் சார்பு ஆய்வாளர் பணியிடங்களுக்கு ஆண்கள் 255, பெண்கள் 111 என மொத்தம் 366 பணியிடங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக ஆண்களுக்கு 909 பணியிடங்களும், பெண்களுக்கு 390 பணியிடங்கள் என 1299 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. இவர்களுக்கான கல்வித் தகுதி, வகுப்புவாரி இட ஒதுக்கீடு, வாரிசு இட ஒதுக்கீடு, விளையாட்டு வீரர்களுக்கான ஒதுக்கீடு, தமிழ் பயிற்று மொழி முன்னுரிமை, சிறப்பு பிரிவினருக்கான சலுகை, ஆதரவற்ற விதவை, திருநங்கைகள், காவல்துறை சார்ந்த விண்ணப்பதாரர்கள், பொது விண்ணப்பதாரர்கள், தேர்வு நிலை உள்ளிட்ட பல்வேறு தகவல்களையும் டிஎன்எஸ்யூஆர்பி அந்த வெளியீட்டில் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் வயது தகுதி தொடர்பாக கேள்வி எழுப்பி இருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அதாவது விண்ணப்பதாரர் 01,07,2025 அன்று 20 வயது நிறைவுற்றவராகவும், 30 வயது நிறைவு பெறாதவராக இருக்க வேண்டும். அதாவது 02.07.1995 அல்லது அதற்கு பின்னர் பிறந்தவராகவும், 1.7.2005 அன்று அல்லது அதற்கு முன்னர் பிறந்தவராக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பிற்படுத்தப்பட்ட இஸ்லாமியர்கள், மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு, சீர் மரபினருக்கு வயது உச்சவரம்பாக 32 ஆண்டுகளும், ஆதிதிராவிடர், ஆதிதிராவிடர் அருந்ததியர், பழங்குடியினருக்கு 35 வருடங்களும், திருநங்கைகளுக்கு 35 வருடங்களும், ஆதரவற்ற விதவைக்கும் 37 வருடங்களும், ராணுவத்தினர், மத்திய காவல் ஆயுதப் படையினருக்கு 47 வருடங்களும், 20 சதவீத துறை ஒதுக்கீட்டின் கீழ் விண்ணப்பிப்பவர்களுக்கு 47 வருடங்களும் வயது உச்சவரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வயது வரம்பை தளர்த்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருக்கிறார் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை. அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது:-
கடந்த 2024 ஆம் ஆண்டுக்கான, சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வுகளை நடத்தாமல், இளைஞர்களின் ஒரு ஆண்டினை வீணடித்த திமுக அரசைக் கண்டித்தும், 2025 ஆம் ஆண்டுக்கான சார்பு ஆய்வாளர், இரண்டாம் நிலைக் காவலர் தேர்வில், 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயிக்க வேண்டும் என்றும், ஏற்கனவே திமுக அரசை வலியுறுத்தியிருந்தோம்.
இந்த நிலையில், இன்று வெளியிடப்பட்டு இருக்கும் காவலர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பில், வயது வரம்பு 01-07-2025 தேதி அன்று 30 வயது நிரம்பியிருக்கக் கூடாது என்று குறிப்பிடப்பட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. கடந்த ஆண்டு தேர்வுகள் நடத்தாமல் பல நூறு இளைஞர்களின் வயது வரம்பு ஒரு ஆண்டு தள்ளிப் போயிருக்கிறது. திமுக அரசு செய்த தவற்றால், இளைஞர்களின் காவல்துறை கனவு பறிபோவதை அனுமதிக்க முடியாது.
உடனடியாக, காவலர் தேர்வுகளுக்கு, 2024 ஆம் ஆண்டு அடிப்படையிலேயே வயது வரம்பை நிர்ணயித்து, மாற்று அறிவிப்பு வெளியிட வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.