காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும்: மார்க்சிஸ்ட் மாநாட்டில் தீர்மானம்!

வக்பு சட்டத் திருத்தம் முஸ்லிம்களை துன்புறுத்தவே வழிவகுக்கும். எனவே அதைத் திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தேசிய மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மார்க்சிஸ்ட் கம்யூனி்ஸ்ட் கட்சியின் அகில இந்திய 24-வது மாநாட்டு மதுரையில் கடந்த 2-ம் தேதி தொடங்கியது. மூன்றாவது நாளான நேற்று மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:

வக்பு சட்டத் திருத்தம் மூலம் பாஜக அரசு மக்களைப் பிளவுபடுத்த முயற்சிக்கிறது. இந்துத்துவா நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்துள்ளது. முஸ்லிம் அல்லாதோர் வக்பு சொத்துகளை நிர்வகிக்க முடியாத நிலையில், தற்போதைய சட்டத் திருத்தம் முஸ்லிம் அல்லாதோரும் நிர்வகிக்க வழிவகை செய்கிறது. இது அரசியலமைப்பு உரிமை மீதான தாக்குதலாகும். மேலும், சகோதரத்துவத்தை சீர்குலைக்கும். மேலும், சட்டப் பிரிவு 40-ஐ ரத்து செய்வதன் மூலம் வக்பு சொத்துகளின் தன்மையை தீர்மானிக்கும் அதிகாரத்தை வக்பு வாரியம் இழக்கும். புதிய திருத்தம் மூலம் பெரும்பாலான வக்பு சொத்துகள் அரசால் கையகப்படுத்தும் அபாயம் உள்ளது.

உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் வக்பு சொத்துகள் உள்ளன. புதிய திருத்தம் மூலம் இந்த சொத்துகள் கையகப்படுத்தப்படும். புதிய திருத்தும் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளை ஒழிக்கும் நிகழ்ச்சி நிரலை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது. இது குடியுரிமை திருத்தச் சட்டத்தின் (சிஏஏ) நோக்கத்தைப் பிரதிபலிக்கிறது.

2021-ல் நடைபெறவிருந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு இதுவரை நடத்தப்படாதது மிகுந்த கவலை அளிக்கிறது. மத்திய அரசு உடனடியாக மக்கள்தொகை கணக்கெடுப்பையும், அதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பையும் நடத்த வேண்டும்.

கடந்த 10 ஆண்டுகளாக இந்திய தேர்தல் ஆணையத்தால் நடத்தப்பட்ட தேர்தல்கள் தெளிவற்றதாகவும், அரசியலமைப்புக்கு விரோதமாகவும் உள்ளது மிகுந்த கவலையளிக்கிறது. பண பலம் கொண்ட கட்சிகளுக்கு ஆதரவாக தேர்தல் செயல்கள் முறைகள் மாறியுள்ளன.

மகராஷ்டிரா மாநிலத்தில் 2024 ஏப்ரலில் நடந்த மக்களவைத் தேர்தலுக்கும், நவம்பர் 2024-ல் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலுக்கும் இடையிலான 7 மாதங்களில் வாக்காளர் எண்ணிக்கை பெரிதும் அதிகரித்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பியுள்ளது. வாக்காளர் சேர்க்கைக்கான ஆவணங்கள் இதுவரை வழங்கப்படவில்லை. அவற்றை உடனடியாக வழங்க வேண்டும்.

காசா மீதான இஸ்ரேலின் இனப் படுகொலையை இந்த மாநாடு கண்டிக்கிறது. காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்பட வேண்டும். பாஜக அரசு இஸ்ரேலை ஆதரிப்பதை நிறுத்திவிட்டு, பாலஸ்தீனத்தை ஆதரிக்கும் கொள்கைக்குத் திரும்ப வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.