அமெரிக்க வரிவிதிப்பு விவகாரத்தில் பிரதமர் மோடி மவுன விரதம்: காங்கிரஸ்!

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும்போது, பிரதமர் மோடி மவுன விரதத்தை தொடங்குகிறார் என்று மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் கவுரவ் கோகாய் விமர்சித்துள்ளார். இந்திய பொருட்களுக்கு ட்ரம்ப்பின் அமெரிக்க அரசு நிர்வாகம் 27 சதவீதம் வரி விதித்துள்ளது குறித்து பிரதமரையும், பாஜக அரசையும் கோகாய் இவ்வாறு சாடியுள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் கவுரவ் கோகாய் கூறியதாவது:-

இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் நேரத்தில் பிரதமர் மோடி மவுன விரதத்தைத் தொடங்கியுள்ளார். அவர் தனது மவுன விரதத்தை கலைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த வரிகள் நமது சிறுதொழில்கள், சிறு குறு நிறுவனங்கள், விவசாயத் துறைகளின் பொருளாதாரத்தை கடுமையாக பாதிக்கும். இந்த விவகாரத்தில் பிரதமர் மவுனமாக இருப்பது ஏன்? பிறநாட்டுத் தலைவர்கள் எல்லாம், தங்களின் விளக்கங்களை கொடுத்து வருகிறார்கள்.

தங்கள் நாடுகளின் மீதான வரிகளுக்கு அவர்கள் கண்டனத்தைத் தெரிவித்து வருகின்றனர். ஆனால், நமது பிரதமர் மட்டும் இதுகுறித்து ஏதுவும் சொல்லாமல் இருக்கிறார். அவர் எங்கே இருக்கிறார்? இந்தியப் பொருளாதாரம் சிக்கலில் இருக்கும் போதெல்லாம், இந்த அரசு பின்வாங்கி, பிரித்தாளும் அரசியலை முன்னெடுக்கிறது என்பதையே இது காட்டுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு புதிய இறக்குமதி வரியை புதன்கிழமை அறிவித்துள்ளார். இந்தியப் பொருள்களுக்கு ட்ரம்ப் 27 சதவீதம் வரி விதித்துள்ளார். இந்தப் பின்னணியில் மக்களவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 27 சதவீத பரஸ்பர வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்ததைக் கண்டித்து, காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் அணி), திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டன. நாடாளுமன்றத்தின் மகர் துவார் படிக்கட்டுகளில் நின்றவாறு காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால், விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் உள்ளிட்ட சுமார் 50 எம்பிக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அமெரிக்காவின் இந்த வரிவிதிப்பு மோடி அரசுக்கு ஏற்பட்ட அவமானம் என்றும் அவர்கள் விமர்சித்தனர்.