மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தண்டனை: மு.க.ஸ்டாலின்!

மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தண்டனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

மத்திய அரசு அடுத்த ஆண்டு (2026) தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ள உள்ளது. மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு நடைபெற உள்ளதால் வட இந்திய மாநிலங்களில் தொகுதிகள் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும். அதேவேளை, தென்மாநிலங்களில் தொகுதிகளின் எண்ணிக்கை குறையலாம். இதற்கு தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட பல்வேறு தென்மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

இந்நிலையில், மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தண்டனை என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரித்துள்ளார். இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-

வட மாநிலங்களின் மக்கள்தொகை பெருக்கத்தை அரசியல் ஆயுதமாக பயன்படுத்தி தென்மாநிலங்களை மவுனமாக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது. தற்போதைய மக்கள்தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு என்பது தேசிய மக்கள்தொகை இலக்கை அடைய முயற்சிக்கும் எங்களுக்கு கிடைகும் தண்டனை. இது கூட்டாட்சி நியாயத்திற்கு எதிரானது. எக்கானாமிக் டைம்சில் வெளியான செய்தி இந்திய ஜனநாயகத்தையே மறுவடிவமைக்கக்கூடிய சீர்குலைவின் அளவை அம்பலப்படுத்துகிறது. உண்மையான, நியாயமான முறையில் தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.