மக்கள் அரசியலில் பாதுகாப்பு என்பது அவசியமில்லை: சீமான்!

தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு அளிக்கப்பட்ட நிலையில். “ராணுவ அரசியலுக்கு வேண்டுமானால் ’Y’ பிரிவு பாதுகாப்பு தேவைப்படுமே தவிர; மக்கள் அரசியலுக்கு தேவைப்படாது” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

நாம் தமிழர் கட்சியின் தலைவர் சீமான், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குறித்து பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளார். திருவண்ணமலை மாவட்டம், செய்யாறுவில் பேசிய அவர், பாஜக-யில் நல்லவர்கள் மட்டுமே உள்ளனர் என்று அண்ணாமலை கூறுகிறார். மற்ற கட்சிகளில் இல்லையா? என்ற கேள்விக்கு “இது தம்பியின் நம்பிக்கை. அதை நாம் ஏன் கெடுக்க வேண்டும்?” என்று கேள்வி எழுப்பினார்.

சீமான் மேலும் கூறுகையில், பாஜக-யின் அரசியல் கொள்கை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான சிந்தனையை அடிப்படையாகக் கொண்டது என்று விமர்சித்தார். “பசு மாடு, பக்கத்து நாடு பாகிஸ்தான், ஜெய் ஸ்ரீராம் கோஷங்கள் தவிர வேறு அரசியல் கொள்கை உள்ளதா? அயோத்தி கோயில் கட்டி முடித்த பிறகு, அந்த பிரச்சினை முடிந்துவிட்டது. இப்போது பூரி ஜெகநாத் கோஷமே அவர்களுக்கு கொள்கையாக உள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

வக்பு வாரிய இடங்கள் தொடர்பான சர்ச்சை குறித்தும் பேசிய சீமான், “இஸ்லாமிய மக்கள் நற்காரியங்களுக்காக நன்கொடையாக வழங்கிய இடங்களை மூடுவீர்களா? பிரதமர் மோடி அரபு நாடுகளில் இந்து கோயில்களை திறந்து பெருமையாக பேசவில்லையா?” என்று கேள்வி எழுப்பினார். மதம், உணவு, உடை, மொழி போன்றவை ஒவ்வொருவரின் உரிமை என்றும், அதை கட்டாயப்படுத்துவது சர்வாதிகாரம் என்றும் அவர் விமர்சித்தார்.

முத்தலாக் தடைச் சட்டத்தையும் சீமான் கடுமையாக எதிர்த்தார். “இஸ்லாமிய சட்டத்தில் பெண்களுக்கு அதிக உரிமைகள் உள்ளன. அதை தகர்த்து, இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை தூண்டி வாக்குகளை பெற பாஜக முயல்கிறது,” என்று குற்றம்சாட்டினார். “அண்ணாமலை தனது கட்சியின் தலைமை முடிவுகளை பின்பற்றுபவர். மக்களின் மனதை வெல்ல வேண்டுமானால், மக்கள் அரசியலை முன்னெடுக்க வேண்டும்,”

தவெக தலைவர் விஜய்க்கு ’Y’ பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது, இது எளிய மக்களை சந்திப்பதை தவிர்க்கும் முயற்சியா? என்ற கேள்விக்கு, “அப்படி சொல்ல முடியாது. அது அவருக்கு தேவைப்படுகிறது. தம்பி அதைக் கேட்டு பெற்றிருக்கிறார். ஆனால் எனக்கு அது தேவையில்லை. நான் நினைப்பது, நான்தான் என் நாட்டுக்கும் மக்களுக்கும் பாதுகாப்பு என்று. எனக்கு எதற்கு பாதுகாப்பு என்று நினைப்பேன். எனக்கு என் மக்களே முக்கியம். நான் யாருடன் செல்கிறேன், யாரைச் சந்திக்கிறேன் என்று நானே தீர்மானிப்பேன். மக்கள் அரசியலில் பாதுகாப்பு என்பது அவசியமில்லை என்று நினைக்கிறேன். இந்த ராணுவ அரசியலுக்கு அது தேவையாக இருக்கலாம்” என சீமான் கூறினார்.

பாஜக மாநிலத் தலைவர் மாற்றம் குறித்த கேள்விக்கு, ”அது அவர்களுடைய கட்சியைப் பொறுத்தது. அவர்கள் கட்சியின் தலைமை எடுக்கும் முடிவுகளுக்கு ஏற்பவே அவர்கள் செயல்படுவார்கள். அதற்காகவே அவர்கள் பயிற்சி பெற்றிருக்கிறார்கள். எல்லாவற்றிலும் போய் கருத்து சொல்ல வேண்டும் என்று அண்ணனிடம் கேட்கக் கூடாது. அவர்கள் கட்சியின் தலைமை எந்த முடிவை எடுக்கிறதோ, அதன்படி அவர்கள் இயங்குவார்கள்” என சீமான் கூறினார்.