வக்பு திருத்த சட்டத்தை கண்டித்து ஏப்.8-ம் தேதி விசிக ஆர்ப்பாட்டம்: திருமாவளவன்!

வக்பு திருத்தச் சட்டத்தை கண்டித்து ஏப்.8-ம் தேதி மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெறும் என விசிக தலைவர் திருமாவளவன் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருமாவளவன் விடுத்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முஸ்லீம் அமைப்புகளும் பெரும்பாலான அரசியல் கட்சிகளும் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்த போதும், அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாக வக்பு திருத்தச் சட்டத்தைப் பாசிச பாஜக அரசு நிறைவேற்றியுள்ளது.

இது சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு அரசியலை அடிப்படையாகக் கொண்ட மிகவும் அப்பட்டமான பாசிசத் தாக்குதலாகும். வக்பு நிர்வாக அமைப்புகளில் முஸ்லிம் அல்லாதவர்களைப் பெரும்பான்மையான எண்ணிக்கையில் உறுப்பினர்களாக நியமித்து அதன்மூலம் வக்பு சொத்துகளை அபகரிப்பதற்கு பாஜக அரசு திட்டமிட்டுள்ளது.

இவ்வாறு அரசமைப்புச் சட்டத்துக்கும் தேசிய ஒருமைபாட்டுக்கும் எதிரான வக்பு திருத்தச் சட்டத்தைக் கண்டித்து விசிக சார்பில் வரும் ஏப்.8-ம் தேதி புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படும். மேலும், சட்டத்தை எதிர்த்து விசிக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.