வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல்!

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவுக்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா சட்டமாக அமலாக உள்ளது. அரசிதழில் வெளியானதும் சட்டம் அமலாகும் என்று தெரிகிறது.

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா கடந்த 2 ஆம் தேதி நாடாளுமன்ற லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர் மசோதா மீதான விவாதம் நள்ளிரவு வரை நீடித்தது. சுமார் 12 மணி நேரத்துக்குப்பின் நள்ளிரவில் மசோதா மீது வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் 288 வாக்குகளுடன் மசோதா நிறைவேறியது. மசோதாவுக்கு எதிராக 232 வாக்குகள் பதிவானது. மறுநாள் ராஜ்யச்பாவில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது. லோக்சபாவை போலவே ராஜ்யசபாவிலும் மசோதா மீதான விவாதம் 13 மணி நேரமாக நடைபெற்றது. இதையடுத்து, ராஜ்யசபாவில் மசோதா நிறைவேறியது. ஆதரவாக 128 எம்.பிக்களும் எதிர்ப்பு-95 எம்பிக்களும் வாக்களித்தனர். இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், மசோதா குடியரசுத்தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த நிலையில், வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார். குடியரசுத்தலைவர் ஒப்புதல் அளித்துள்ளதால் இந்த மசோதா சட்டமாக அமலாக உள்ளது. அரசிதழில் வெளியானதும் சட்டம் அமலாகும் என்று தெரிகிறது.

இதற்கிடையே, வக்பு வாரிய திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து உச்ச நீதிமன்றத்தில் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் வழக்கு தொடர்ந்துள்ளன.