மத்திய பாஜக அரசு நிறைவேற்றிய வக்பு வாரிய சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வலியுறுத்தி வரும் 13 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என நாம் தமிழர் கட்சி அறிவித்துள்ளது.
மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் சென்னை வந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவரைச் சந்தித்துப் பேசியதாக தகவல்கள் பரபரத்தன. ஆனால், இந்தச் சந்திப்பு நடக்கவில்லை என சீமான் மறுத்துள்ளார்.
இந்நிலையில், பாஜக அரசின் வக்பு சட்டத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது நாம் தமிழர் கட்சி. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
இஸ்லாமியப் பெருமக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி வலுக்கட்டாயமாக இந்திய ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரியச் சட்டத்திருத்த முன்வரைவினை உடனடியாகத் திரும்பப்பெற வலியுறுத்தி, நாம் தமிழர் கட்சி சார்பாக வருகின்ற 13-04-2024 அன்று காலை 10 மணியளவில் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் மாபெரும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்குமாறு தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவுறுத்தியுள்ளார்.
ஒருங்கிணைந்த சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள் சார்பாக சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு திடல் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில், வரும் 13 ஆம் தேதி காலை 10 மணி முதல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற இருக்கிறது. இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.