வக்பு திருத்த மசோதா மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணம்: செல்வப்பெருந்தகை!

வக்பு திருத்த மசோதா எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது என்று செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

வக்பு திருத்த மசோதா முஸ்லிம்களை ஓரங்கட்டுவதையும் அவர்களின் தனிப்பட்ட சட்டங்கள் மற்றும் சொத்துரிமைகளைப் பறிப்பதையும் நோக்கமாகக் கொண்ட ஒரு ஆயுதம் என்பது உறுதியாகியுள்ளது. ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க. மற்றும் அவர்களது கூட்டாளிகளால் அரசியலமைப்பின் மீதான இந்தத் தாக்குதல் இன்று முஸ்லிம்களை இலக்காகக் கொண்டது, ஆனால் எதிர்காலத்தில் மற்ற சமூகங்களை குறிவைப்பதற்கான ஒரு முன்னுதாரணத்தை அமைக்கிறது. இந்தச் சட்டம் இந்தியாவின் கருத்தையே தாக்குவதாலும், மத சுதந்திர உரிமையான 25-வது பிரிவை மீறுவதாலும் காங்கிரஸ் கட்சி இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கிறது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஆர்.எஸ்.எஸ்.-ன் அதிகாரபூர்வ இதழான ஆர்கனைசர், “இந்தியாவில் யாருக்கு அதிக நிலம் உள்ளது? கத்தோலிக்க திருச்சபை vs வக்பு வாரியம் – ஒரு விவாதம்” என்ற தலைப்பில் கட்டுரை வெளியிட்டுள்ளது. அதில் கத்தோலிக்க அமைப்புகளுக்கு 7 கோடி ஹெக்டேர்கள் நிலம் இருப்பதாகக் கூறியுள்ளது. அவை மிகப்பெரிய அரசு சாரா நில உரிமையாளராக இருப்பதாக விமர்சித்துள்ளது. வக்பு சட்ட திருத்தத்தை செய்து முடித்த பின்னர் அடுத்து ஆர்.எஸ்.எஸ். இந்தியாவின் மற்றொரு சிறுபான்மையினரான கிறிஸ்தவர்களை இதன் மூலம் குறிவைத்துள்ளது.

1930-களில், ஹிட்லர் தலைமையிலான நாஜி கட்சியினர், இதே பாணியில் முதலில் கம்யூனிஸ்டுகளையும், அடுத்ததாக தொழிற்சங்கவாதிகளையும், பின்னர் யூதர்களையும் பிடித்து அழித்தனர். அதே பாணியில் இன்று பா.ஜ.க. தலைமையிலான சங் பரிவார் குழுவினர், முதலில் முஸ்லிம்களை குறி வைத்துள்ளன. அடுத்தது கிறிஸ்தவர்களை குறிவைக்க திட்டமிட்டுள்ளது தெளிவாகியுள்ளது. அன்று ஜெர்மனியில், அவர்களுக்காக குரல் கொடுக்க யாருமில்லை. ஆனால் இன்று சிறுபான்மையினர் மற்றும் விளிம்பு நிலை மக்களை, மோடி அரசின் பாசிச தாக்குதல்களில் இருந்து பாதுகாக்க, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன் கார்கே தலைமையிலான காங்கிரஸ் பேரியக்கமும் உள்ளனர்.

அண்ணல் அம்பேத்கர் உருவாக்கிய இந்திய அரசியல் சாசனத்தை அழிக்க பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். முன்னெடுத்து வரும் இத்தகைய நாச வேலைகளை காங்கிரஸ் பேரியக்கம் முழு மூச்சாக எதிர்க்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.