ஏழை மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது மத்திய அரசு: செல்வப்பெருந்தகை!

சிலிண்டர் விலையை உயர்த்தி ஏழை எளிய மக்களின் தலையில் மத்திய அரசு இடியை இறக்கியுள்ளது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து செல்வப்பெருந்தகை தனது எக்ஸ்வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

மத்தியில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த 2014ம் ஆண்டு முதல், வீட்டு உபயோக காஸ் சிலிண்டர் 410 ரூபாயில் இருந்து தொடர்ந்து உயர்ந்து கொண்டே போய் தற்போது ரூ 820 என்ற அளவில் உயர்ந்துள்ளது. தினசரி பயன்படுத்தும் அத்தியாவசிய தேவையான காஸ் சிலிண்டர் விலையை இன்று ரூபாய் 50 என்ற அளவில் உயர்த்தி அடித்தட்டு மக்களின் தலையில் இடியை இறக்கியுள்ளது ஒன்றிய பாஜக அரசு.

மேலும், வாழ்வாதாரம் இழந்து தவித்து வரும் ஏழை, எளிய மக்களின் துயரத்தை கண்டுகொள்வதே இல்லை. நாடு முழுவதும் வேலையில்லா திண்டாட்டம், அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் சூழலில், காஸ் சிலிண்டர் விலையையும் ஒன்றிய பாஜக அரசு உயர்த்தியுள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். இந்த விலை உயர்வைத் திரும்பப் பெற வேண்டும்.

சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்த போதும் ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் விலையை குறைக்காமல் தொடர்ந்து உயர்த்தி வருகிறது. இதன்மூலம் ஒன்றிய அரசும், எண்ணெய் நிறுவனங்களும் கொள்ளை லாபம் அடைகின்றனர். இதன் காரணமாக விவசாயிகள், நடுத்தரக் குடும்பத்தினர், சிறு, குறு தொழில் நிறுவனங்கள் உரிமையாளர்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நிலைமை இவ்வாறு இருக்க பெட்ரோல், டீசல் ஒரு லிட்டருக்கு கலால் வரி ரூ 2 என்ற அளவில் ஒன்றிய அரசு உயர்த்தியிருப்பது கண்டனத்திற்குரியது. இதனால் அத்தியாவசியப் பொருள்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சாமானிய மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாவர்கள்.

ஒன்றிய அரசு பெட்ரோல், டீசல் மீதான விலையை குறைக்கவேண்டும். ஏற்றப்பட்ட கலால் வரியை உடனடியாக திரும்பப் பெறவேண்டும். சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் குறைந்திருப்பதால் அதன் பலன்கள் மக்களுக்கு சென்றடைய வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.