வக்பு வாரிய திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக உச்சநீதிமன்றத்தில் மனு!

வக்பு வாரிய சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக திமுக சார்பிலும் உச்சநீதிமன்றத்தில் இன்று மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

வக்பு வாரியங்களில் முஸ்லிம் அல்லாத உறுப்பினா்கள் நியமனம், குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் இஸ்லாத்தை பின்பற்றுவோா் மட்டுமே வக்பு சொத்துகளை அா்ப்பணிக்க முடியும் என்பது உள்ளிட்ட திருத்தங்களைக் கொண்ட வக்பு சட்டத் திருத்த மசோதா, எதிா்க்கட்சிகளின் கடும் எதிா்ப்புக்கு இடையே தாக்கல் செய்யப்பட்டு, நாடாளுமன்ற கூட்டுக்குழு ஆய்வுக்குப் பிறகு மசோதாவில் சில திருத்தங்கள் மேற்கொண்டு பின்னர் நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. இரு நாள்களுக்கு முன்பாக குடியரசுத் தலைவர் இதற்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில் இந்த மசோதாவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் நடைபெற்று வருகிறது. உச்சநீதிமன்றத்தில் இந்த மசோதாவுக்கு எதிராக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு வருகின்றன.

காங்கிரஸ் எம்.பி. முகமது ஜாவத், மஜ்லிஸ் கட்சித் தலைவா் அஸாதுதீன் ஒவைஸி, ஆம் ஆத்மி தரப்பிலிருந்து எம்எல்ஏ அமனத்துல்லா கான், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியைத் தொடர்ந்து திமுக தரப்பிலும் இன்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

திமுக துணை பொதுச் செயலாளரும் மக்களவை திமுக கொறடாவுமான ஆ. ராசா, மனுவை தாக்கல் செய்துள்ளார். மேலும் மனுவில் முஸ்லீம்களின் உரிமை மீறப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.