தமிழக சட்டப் பேரைவையில் தான் கேள்வி கேட்பது பேரவைத் தலைவருக்கு எரிச்சலை மூட்டுவதாகவும், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு இலவு காத்த கிளி போல காத்திருப்பதாகவும் பண்ருட்டி சட்டப் பேரவை உறுப்பினர் வேல்முருகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் ஏற்கனவே சட்டப்பேரவையில் சாதிவாரி கணக்கெடுப்பு, வேலைவாய்ப்பில் தமிழர்களுக்கான முன்னுரிமை வழங்குவது போன்றவை தொடர்பாக பேச முயற்சி செய்தபோது திமுக அமைச்சர்களும், முதல்வர் ஸ்டாலினும் அவரை கண்டித்திருந்தனர். தமிழக அரசியலில் தொடர்ந்து வேல்முருகனின் நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், சட்டப் பேரவையில் தான் பேசுவது பேரவைத் தலைவருக்கு கடும் எரிச்சலை மூட்டுவதாகவும், கவன ஈர்ப்பு தீர்மானம் கொடுத்துவிட்டு இலவு காத்த கிளிபோல காத்திருக்கிறேன் என்று வேல்முருகன் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். இதுகுறித்து, தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
சில கேள்விகளை எழுப்புவதற்காக நான் பேச எழுந்த ஒரு நிமிடத்திற்கு முன்பாகவே பேரவைத் தலைவர் நன்றி மட்டுமே நீங்கள் சொல்ல வேண்டும். பேச கூடாது என்று இடையில் குறுக்கிட்டு மறுத்தார். இதேபோல, வெள்ளிக்கிழமை நான் என் தொகுதி சார்ந்து பேசியபோதும், பண்ருட்டி பழா மற்றும் முந்திரிக்கு புவிசார் குறியீடு கொடுத்தது தொடர்பாகவும், விவசாயிகள் படுகின்ற துன்பங்கள், துயரங்கள் குறித்து பேச முற்பட்டபோது, நீங்கள் பேசக் கூடாது என்று கூறி என் பேச்சை துண்டித்தார். அதைத்தொடர்ந்து, கேள்வி நேரத்தில் துணை கேள்வி கேட்பதற்காக கைதூக்கி கேள்வி கேட்கத் தொடங்கினேன். ஆனால் என்னுடைய கேள்வியை முழுவதுமாக கேட்க அனுமதிக்காமல் துணைக் கேள்வி கேட்கக்கூடாது என்றே பதிவு செய்திருக்கிறார். இது பேரவைக் குறிப்பில் இடம்பெற்றுள்ளது. அதற்கான சாட்சியும் என்னிடம் உள்ளது.
இது எந்தவிதமான ஜனநாயகம் என்று கேட்டு பேரவைத் தலைவரை நோக்கி ஒரு கும்பிடுபோட்டுவிட்டு வந்திருக்கிறேன். இது ஜனநாயக மாண்பில்லை. பேரவைத் தலைவர் தொடர்ந்து என்னை மட்டும் குறிவைத்து நியாயமான, சட்டப்பூர்வமான, மக்களுக்கான, மண்ணுக்கான, தமிழ்நாட்டு மீனவர்களுக்காக, பாதிக்கப்படும் மக்களுக்காக நான் பேச எழுகின்ற போதெல்லாம் முழுவதுமாக பேசவிடாமல் என்னைத் தடுப்பதை நான் எதிர்க்கிறேன். மக்களுக்காக நான் பேசக்கூடியவன். எந்த தரப்பு மக்கள் பாதிக்கப்பட்டாலும் அவர்களுடைய பிரச்சனையை கவன ஈர்ப்பு, ஒத்திவைப்பு செய்யும் வகையில் கேள்வி எழுப்புகிறேன். விதிகளை சட்டப்படி பின்பற்றி எனக்குரிய நேரத்தில், எனக்குரிய வாய்ப்பை நான் கேட்கிறேன். அதுதான் பேரவைத் தலைவருக்கு எரிச்சல் மூட்டுகிறது.
எல்லோரும் மாணவர்கள் போல் கட்டுப்படும்போது, பொட்டிப் பாம்பாய் அடங்கும்போது வேல்முருகன் மட்டும் எழுந்து கேள்வி கேட்கிறார், நேரம் கேட்கிறார் என்று பேரவைத் தலைவர் கருதுகிறார் போல். அவர் நினைக்கிற அளவுக்கு என்னால் செயல்பட முடியாது. நான் என் தொகுதி மக்களுக்காகவும், நாட்டு மக்களுக்காகவும் தான் செயல்பட முடியும். ஒரு சில மூத்த அமைச்சர்கள், முன்வரிசைத் தலைவர்கள், அவர்களிடம் தகவல்களைச் சொல்லி கேள்வி எழுப்பச் சொல்லி அதற்கு பதிலளிக்கின்றனர். கவன ஈர்ப்பு கொடுத்துவிட்டு நான் இலவு காத்த கிளி போல காத்திருக்கிறேன். இது எப்படி சட்ட மரபாகும், இதுதான் பேரவைத் தலைவர் செய்யும் மாண்பா. தினந்தோறும் அவருடைய அறைக்குச் சென்று இதுதொடர்பாக நான் கேள்வி எழுப்பி வருகிறேன். மற்றவர்களின் கவன ஈர்ப்பு கேள்விகளை எடுக்கிறீர்கள். ஏன் என்னுடையது எடுக்கப்படுவதில்லை. சட்டரீதியாக, விதிப் பிராகாரம் கேட்பதில் அவருக்கு உடன்பாடில்லை. அதனால், தொடர்ந்து எனக்கு எதிரான வாய்ப்பை மறுக்கிறார். இந்த செயல் கடும் வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இவ்வாறு அவர் கூறினார்.