டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை: அமைச்சர் ரகுபதி!

“டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டுமென கேட்கவில்லை” என்று சட்டத்துறை அமைச்சர் ரகுபதி விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பாக தலைமைச் செயலக வளாகத்தில் செய்தியாளர்களிடம் சட்டத்துறை அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

டாஸ்மாக் வழக்கை வேறு மாநிலத்திற்கு எதற்கு மாற்ற வேண்டும் திமுகவுக்கு பயமா? என எதிர்க்கட்சித் தலைவர் கேட்டிருக்கிறார். எங்களுக்கு மடியிலே கணமுமில்லை, வழியிலே பயமுமில்லை. டாஸ்மாக் தொடர்பான வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் விசாரிக்க வேண்டும் என்று மட்டுமே நாங்கள் கோரி இருக்கிறோம். வேறு மாநிலத்தில் வைத்து வழக்கை விசாரிக்க வேண்டும் என்று நாங்கள் கோரவில்லை. இதை எதிர்கட்சித் தலைவர் சரியாக புரிந்து கொள்ளவில்லை.

அமலாக்கத் துறை சோதனையானது 2016-21 இடையே நடந்த பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் நடந்தது. இந்தச் சோதனையில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதா? எவ்வளவு பணம்? என்பதெல்லாம் அவர்கள் வெளியிடவில்லை. ஆனால் அதைத் தொடர்ந்து தமிழக பாஜக தலைவர் ரூ.1,000 கோடி ஊழல் என்று தெரிவித்தார். அதைத்தான் அமலாக்கத் துறை அறிவித்தது. இவர்களைத் தொடர்ந்து பழனிச்சாமியும் அதையே கூறி வருகிறார். இதன் மூலம் இவர்களுக்கு இடையே உள்ள தொடர்பை தெரிந்து கொள்ள முடியும்.

எங்களது ஆட்சியில் டாஸ்மாக்கில் எந்த முறைகேடும் இல்லை என்பதை எங்களால் நீதிமன்றத்தில் நிரூபிக்க முடியும். எந்த தவறுக்கும் அரசோ, முதல்வரோ இடம் கொடுக்கவில்லை. மேலும் எதிர்க்கட்சித் தலைவர் அவரைப் பேச அனுமதிக்கவில்லை என்று சொல்கிறார். நீதிமன்றத்தில் இருக்கும் ஒரு வழக்கை சட்டப்பேரவையில் பேசக் கூடாது. இவ்வாறு ரகுபதி கூறினார்.