பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

பிரதமர் மோடிக்கு தமிழ்நாட்டில் இடமில்லை. 2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் கொங்குநாடு கலைக்குழு சார்பில் வள்ளி கும்மியாட்ட நிகழ்ச்சி கோவை கொடிசியா மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு வள்ளி கும்மியாட்டம் ஆடினர். இந்த நிகழ்ச்சியை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். மேலும் கடந்த ஆண்டு பெருந்துறையில் நடந்த வள்ளிகும்மியாட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று சாதனை படைத்த 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டு சான்றிதழும் வழங்கினார்.

அதன்பின்னர் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

வள்ளிகும்மி ஆடிய 16 ஆயிரம் பெண்களுக்கு பாராட்டுக்கள் மற்றும் வாழ்த்துகள்; கலக்கீட்டீங்க. பெண்கள் என்றாலே சாதனைதான்; பெண்கள் என்றால் சாதனை; சாதனை என்றால் பெண்கள். இந்த ஆட்சியே மகளிருக்கான ஆட்சி என்பது உங்களுக்கு தெரியும்.

வாக்களிக்காத தமிழ்நாட்டை மத்திய அரசு வஞ்சிக்கிறது; ஆனால் வாக்களிக்காதவர்களுக்கும் செய்ய வேண்டும் என்ற நோக்கில் அரசு திட்டங்களை நிறைவேற்றுகிறது. தமிழ்நாட்டிற்கு தேவையானதை செய்யும் மத்திய அரசு இருந்திருந்தால் நாம் உலக அளவில் முன்னேறி இருப்போம். மத்திய அரசின் வஞ்சனையையும் கடந்து நாம் முதலிடத்தில் உள்ளோம். அதுபோன்ற சாதனைகளை திராவிட மாடல் அரசு செய்து வருகிறது.

பிரதமரை சந்திக்க நேரம் கேட்டோம், இதுவரை தரப்படவில்லை. இலங்கை கடற்படையால் தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் வஞ்சிக்கப்படுவது, தொகுதி மறுசீரமைப்பு உள்ளிட்ட சிக்கல்களுக்கு பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும் என அவர் தமிழ்நாடு வருகை தருவதற்கு முன்பே வலியுறுத்தினேன். ஆனால், மக்களின் முக்கிய சிக்கல்களுக்கு பதில் சொல்லாமல் தவிர்க்கிறவர்களுக்கு, புறக்கணிப்பவர்களுக்கும் தமிழ்நாட்டில் இடமே இல்லை என்பதை வருகின்ற தேர்தலில் மக்கள் வழங்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

2024 நாடாளுமன்ற தேர்தலில் முழுமையான வெற்றி பெற்றுள்ளோம் என்றால், அது நம் ஆட்சிக்கு கிடைத்திருக்கிற நற்சான்றிதழ். 2026 தேர்தலிலும் நாம் தான் வெற்றி பெற போகிறோம். நம் அணியின் வெற்றி நிச்சயம் தொடரும். இவ்வாறு அவர் கூறினார்.