தமிழின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார் பிரதமர் மோடி: சீமான்!

“பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தமிழ் மொழியின் தொன்மையை உலக அரங்கில் பறைசாற்றுகிறார்” என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டி உள்ளார்.

எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற “சொல் தமிழா சொல்” என்ற பேச்சுப் போட்டி நிகழ்ச்சியில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை முன்னிலையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், பிரதமர் நரேந்திர மோடியை உணர்ச்சி பொங்க புகழ்ந்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீமான் பேசியதாவது:-

இந்த நாட்டின் பிரதமர், மாண்புமிக்க ஐயா நரேந்திர மோடி அவர்கள், உலகம் முழுவதும் செல்கிறார். என்ன சொல்கிறார்? உலகில் முதன்மொழி தமிழ். எங்கள் இந்தியாவில் இருப்பது பெருமை. இந்திய மொழிகளின் தொன்மையை தமிழிலிருந்து அறியலாம். உலகில் பல்வேறு நாடுகளில் மக்கள் தமிழைக் கற்றுக்கொள்ள பேரார்வம் கொண்டு வருகிறார்கள். இதை நான் சொல்லவில்லை; நாட்டின் பிரதமர் சொல்கிறார்.

பெத்த தாயை பட்டினி போட்டுவிட்டு எத்தனை ஆயிரம் அன்னதானம் செய்தாலும் பலனில்லை. தாய்மொழி தெரியாமல் எவ்வளவு மொழிகள் கற்றாலும் நீ அறிவற்றவன். பெத்த தாய் யார் என்று தெரியாமல் நீ எப்படி இருப்பாய்?

பாரதியை விட ஒரு புலவன் இருக்கிறானா? பாரதி எல்லா மொழிகளையும் கற்று, ‘யாம் இந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிமையானது எங்கும் காணோம்’ என்று சொன்னான். ஆங்கிலம் இயேசு பிறந்து 500 ஆண்டுகளுக்கு பிறகு உருவான மொழி. ஆனால், இயேசு பிறப்பதற்கு 500 ஆண்டுகளுக்கு முன்பே தமிழின் தொன்மை இலக்கண நூல் தொல்காப்பியம் இருக்கிறது.

ஆங்கிலத்தில் என்ன சிறப்பு? 500-க்கும் மேற்பட்ட கலைச்சொற்களை தமிழ் கொடுத்தது. என் ‘உடன்’ என்ற சொல்லுக்கு ஒரு ‘S’ சேர்த்து ‘சடன்’ ஆகிறது. என் ‘பேச்சு’ ஒரு ‘S’ சேர்த்து ‘ஸ்பீச்’ ஆகிறது. ‘பஞ்சு’ என்றால் ‘ஸ்பாஞ்சு’, ‘கொல்’ என்றால் ‘கில்’, ‘கட்டுமரம்’ என்றால் ‘கட்டுமரம்’, ‘நாவாய்’ என்றால் ‘நேவி’, ‘கலாச்சாரம்’ என்றால் ‘கல்சர்’. உனக்கு என்ன இருக்கிறது? நான் போட்ட பிச்சையில் நீ உரமாகிறாய்.

இங்க பாரு, உனக்கு ஒரு விஷயம் தெரிஞ்சுக்கணும். தாய்மொழியை பாதுகாத்த இனங்கள் கடுகளவு இருந்தாலும் மலையளவு உயர்ந்து வாழும். தாய்மொழியை அழிய விட்ட இனங்கள் மலையளவு இருந்தாலும் கடுகளவு சிறுத்து வீழும். இதை நன்கு விளங்கிக்க. உனக்கு ஒரு திமிர் இருக்கு. நீ கன்னடனா, மராட்டியனா, மலையாளியா, தெலுங்கனா, பீகாரியா, குஜராத்தியா—நீ யாராவது இரு. ஆனால், ‘நான் மராட்டியன்’ என்ற திமிரோடு நீயா இரு. நான் ‘நானா’ இருக்கேன்.

அண்ணாமலையை “தம்பி” என்று குறிப்பிட்டு, “என் தம்பி சொல்றாரு, ‘நான் இந்தியத்திலிருந்து தமிழை பார்க்கிறேன்.’ நான் தமிழகத்திலிருந்து தேசியத்தை பார்க்கிறேன். நான் என் தம்பிக்கு ஒரு விஷயம் சொல்றேன், நான் முதல்ல என் அம்மாவுக்கு மகனா இருக்கேன், அப்புறம் அத்தைக்கு மருமகனா இருக்கேன். இந்த தேசம் நல்லா இருக்கணும்னா, இந்த நாடு நல்லா இருக்கணும்னா, முதல்ல என் வீடு நல்லா இருக்கணும். என் வீடு நல்லா இருக்கணும், உன் வீடு நல்லா இருக்கணும், அவர் வீடு நல்லா இருக்கணும். எல்லா வீடும் நல்லா இருந்தால் நாடு நல்லா இருக்கும். அவ்வளவுதான். இவ்வாறு அவர் பேசியுள்ளார்.

இந்நிகழ்ச்சியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-

சீமானை ஒரு அரசியல் கட்சியின் தலைவர், தலைமை ஒருங்கிணைப்பாளர் என்று கூறுவதைவிட போர்க்களத்தில் நிற்கக்கூடிய தளபதியாகத்தான் நான் என்றுமே சீமானைப் பார்க்கிறேன். காரணம் அவருடைய கொள்கை. அதில் அவர் கொண்டுள்ள உறுதிப் பூண்ட நிலைப்பாடு. அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை என்று தைரியமாகப் போர்க்களத்தில் போராடக்கூடிய மாண்பு. இவை தான் தமிழக அரசியலில் சீமானை தனிப்பெரும் தலைவராக உயர்த்தி கொண்டிருப்பதற்கான காரணம்.

எனக்கும், சீமான் அண்ணனுக்கும் பெரிய வித்தியாசம் இல்லை. நான் தேசியத்தில் தமிழைப் பார்க்கிறேன். அவர் தமிழில் தேசியத்தைப் பார்க்கிறார் அதுதான் அவருக்கும், எனக்கும் உள்ள வித்தியாசம். இருப்பினும், எப்போதும் சீமானுக்கு தொடர்ந்து ஆதராவாக குரல் கொடுப்பதற்கான காரணம் என்ன தெரியுமா. இன்றைக்கு அரசியலில் நேர்மையும், நெஞ்சுறுதியும் குறைந்திருக்கிறது. அவை இருக்கக்கூடிய ஒரு மனிதன் தான் சீமான். தேசிய கட்சிகள் தேசிய பிரச்சனைகளை முதன்மையாகவும், மாநில நலனை முக்கியமாகவும் வைக்க வேண்டும். மாநில கட்சிகள் மாநில பிரச்சனைகளை முதன்மையாகவும், தேசிய நலனை முக்கியமாகவும் நினைக்க வேண்டும். அப்போதுதான் இந்திய அரசியலானது ஆளுமை மிகுந்த மனிதர்களால் நல்லபடியாக மாறும். இன்று இக்கட்டான சூழலில் அரசியல் உள்ளது. பிராந்திய கட்சிகளும், தேசிய கட்சிகளும் உச்சக்கட்டத்துக்குச் செல்லும்போது மக்கள் இடையில் மாட்டிக்கொண்டு முழிக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சீமான், அண்ணாமலை இருவரும் ஒருவரையொருவர் மாறி மாறி புகழ்ந்து பேசியது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.