நாங்கள் யாருடன் கூட்டணி செல்ல வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவருக்கு என்ன இவ்வளவு அக்கறை?காவிரியில் உரிமைகளை வழங்கினால் மட்டும்தான் காங்கிரஸ் உடன் கூட்டணி என்று தி.மு.க. அறிவிக்கத் தயாரா என்று அ.தி.மு.க. கேள்வி எழுப்பியுள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது:-
அ.இ.அ.தி.மு.க. யாருடன் கூட்டணி செல்லவேண்டும், என்ன கோரிக்கை வைக்க வேண்டும் என்பதில் தி.மு.க. தலைவராக இருக்கக் கூடிய ஸ்டாலினுக்கு என்ன இவ்வளவு அக்கறை? ஆடு நனைகிறதே என இந்த ஓநாய் அழுவது ஏன்?
முதலில், மாநில உரிமைகளைப் பற்றி பேச ஸ்டாலினுக்கோ, தி.மு.க.வுக்கோ கொஞ்சமாவது மனசாட்சி இருக்கிறதா?
இந்தியா கூட்டணியின் முதல் கூட்டத்திற்கு பாட்னா சென்றபோது மாநில உரிமைகள் பற்றி ஏதாவது பேசினாரா? அல்லது, இரண்டாவது கூட்டத்திற்காக பெங்களூரு சென்றாரே – அப்போது காவிரி நீர் வராமல் இரண்டாம் போகம் விவசாயம் செய்யமுடியாமல் விவசாயிகள் அவதியுற்றதை கருத்திற்கொண்டு, தமிழ்நாட்டின் காவிரி நதிநீர் உரிமை குறித்து பேசிவிட்டு வந்தாரா?
அவ்வளவு ஏன், தென் தமிழ்நாடே வெள்ளத்தில் தத்தளித்தபோது, தனக்கு வாக்களித்த மக்களைக் காக்க வக்கில்லாமல், இந்தியாவைக் காக்கப் போகிறேன் என்று டெல்லியில் நடைபெற்ற இந்தியா கூட்டணியின் கூட்டத்திற்கு சென்றாரே – அப்போதாவது தமிழ்நாட்டின் மாநில உரிமைகள் பற்றி எதாவது பேசினாரா? கண்டுகொண்டாரா?
இப்போது கர்நாடகத்தில் காங்கிரஸ் அரசுதான் இருக்கிறது. “காவிரியில் தமிழ்நாட்டின் உரிமைகளை வழங்கினால் மட்டும்தான் காங்கிரஸ் உடன் கூட்டணி” என்று வெளிப்படையாக அறிவிக்கத் தயாரா?
நீட் தேர்வை நாட்டிற்கே அறிமுகப்படுத்திவிட்டு, அதை சுப்ரீம் கோர்ட்டு வரை சென்று வாதாடியது எந்தக் கூட்டணி? அந்தக் கூட்டணியில் தானே இன்று வரை இவர்கள் அங்கம் வகித்துக் கொண்டு இருக்கிறார்கள்? இதை விட ஸ்டாலினும், தி.மு.க.வும் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு செய்யக் கூடிய மாபெரும் துரோகம் என்று ஏதாவது உள்ளதா?
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பற்றியோ, அ.தி.மு.க. பற்றியோ பேச என்ன அருகதை இருக்கிறது இவருக்கு?
“ரகசியம் இருக்கிறது” என்று பொய் சொல்லி ஆட்சிக்கு வந்துவிட்டு, இப்போது என்ன செய்வது என்று தெரியாதவர் அரங்கேற்றும் இந்த “ஊட்டி நாடகத்தை” மக்கள் யாரும் நம்பப் போவது இல்லை. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.