கேஸ் விலையேற்றத்துக்கு எதிரான தவெக தலைவர் விஜய்யின் அறிக்கை பற்றி பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்களுடன் பேசிய தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது:-
எங்கள் மாநிலத் தலைவரின் அறிக்கையைப் பாருங்கள், விஜய்யின் அறிக்கையையும் பாருங்கள். தெளிவாக எவ்வளவு ஏறியிருக்கிறது? எவ்வளவு குறைத்திருக்கிறோம்? இப்போது தவிர்க்க முடியாத காரணங்களால் விலை ஏற்றப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ஒரு சினிமா டிக்கெட் எவ்வளவு விலைக்கு விற்கப்படுகிறது? பிரதமர் மோடி கறுப்புப் பணத்தை ஒழித்தார். பணமதிப்பிழப்பு நடவடிக்கைக்குப் பிறகு கறுப்புப் பணம் ஒழிக்கப்பட்டது. இப்போது பிளாக்கில் விற்கப்படும் டிக்கெட் விலை என்ன?
விஜய் படங்களின் டிக்கெட் விலை என்ன? இதை கட்டுப்படுத்தினீர்களா? ‘பாமர மக்களுக்காக நடிக்கிறேன், சுயலாபமே கிடையாது’ என்று சொல்லும் விஜய், பாமர மக்களுக்காக குறைந்த விலையிலோ இலவசமாகவோ டிக்கெட் கொடுக்க வேண்டியதுதானே? யார் தடுத்தார்கள்? உங்களுக்கு லாபமென்றால் பேசமாட்டீர்கள். அதனால் ஒன்றுமே தெரியாமல் விஜய் போன்றவர்கள் பேச வேண்டாம். பிளாக் டிக்கெட் மட்டுமன்றி சினிமா டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. விஜய்க்கு சினிமாவில் நடிக்கவும் வசனம் பேசவும் நடனமாடவும் ஏமாற்றவும்தான் தெரியும். அரசியலோ பொருளாதாரமோ தெரியாது.
பிரதமர் மோடி ஒன்று செய்தார் என்றால் பொத்தாம்பொதுவாக செய்யமாட்டார். மகளிர் தினம் அன்று ஏன் கேஸ் விலை ரூ. 100 குறைத்தார்? மகளிர் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று. சர்வதேச சந்தையில் 62 சதவிகிதத்துக்கு மேல் கேஸ் விலை ஏற்றமடைந்ததால் இன்று மிகக்குறைந்த அளவே ஏற்றியிருக்கிறார். ஆனால், அந்த விலையேற்றமும் வேண்டாம் என்று நாங்கள் கோரிக்கை வைக்க இருக்கிறோம். கேஸ் விலை உயர்த்தப்பட்டதை திரும்பப்பெறுமாறு மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சருக்கு கடிதம் எழுதவிருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.