மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது வயிறு எரிய வேண்டுமா?: மு.க.ஸ்டாலின்

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தள பதிவில் கூறியுள்ளதாவது:-

நாட்டு மக்களின் வீடுகளில் அடுப்பு எரிய வேண்டுமா? அல்லது அவர்களது வயிறு எரிய வேண்டுமா?

“உதவி செய்யாவிட்டாலும் உபத்திரவம் செய்யாமல் இருந்தாலே போதும்” என்பது, மத்திய அரசுக்கு மிகவும் பொருந்தும்!

உலக அளவில் கச்சா எண்ணை விலை சரிந்துள்ள நிலையில், பெட்ரோல், டீசல் விலையைக் குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, விலையை ஏற்றாதீர்கள் எனக் கெஞ்சும் பரிதாப நிலைக்கு நாட்டு மக்களைத் தள்ளிவிட்டார்களே!?

வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல், சமையல் கியாஸ் விலை உயர்வு அமைந்திருக்கிறது.

மக்களே..

அடாவடியாக விலையை உயர்த்திவிட்டு, தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதில் சிறு பகுதியைக் குறைத்து நாடகம் ஆடுவது பா.ஜ.க.வின் வழக்கமாகிவிட்டது! இந்த நாடகத்தைப் பார்த்துப் பார்த்து நமக்கும் பழக்கமாகிவிட்டது!

மத்திய பா.ஜ.க அரசே…

தேர்தல் ஏதாவது வரும் வரை காத்திராமல், இந்த விலை உயர்வை உடனே திரும்பப் பெறுக! இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.