தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதால் எடப்பாடி விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார்: திருமாவளவன்!

திமுக கூட்டணியில் இருந்து நாங்கள் பிரிந்து வருவோம் என காத்திருந்தார் எடப்பாடி, தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதால் விரக்தியில் பேசிக் கொண்டிருக்கிறார் என திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “திமுக கூட்டணி கட்சிகள் எப்போது பிரிந்து வரும் என இலவு காத்த கிளி போல காத்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அது நடக்கவில்லை. தி.மு.க கூட்டணி பலமாக இருப்பதால் விரக்தியில் இவ்வாறு பேசிக் கொண்டிருக்கிறார்” எனத் தெரிவித்துள்ளார்.

2026 சட்டசபை தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தீவிரமாக தயாராகி வருகின்றன. கூட்டணி அமைக்கும் வேலையில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. அண்மையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி டெல்லி சென்று அமித் ஷாவை சந்தித்துப் பேசினார். தொடர்ந்து பல்வேறு கட்சிகளுக்கு இடையே கூட்டணி பேச்சுகள் தொடங்கி இருப்பதாகக் கூறப்படுகிறது. அதிமுக, விசிக உடன் கூட்டணி அமைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகத் தெரிகிறது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் பலர் திருமாவளவன் தங்கள் கூட்டணிக்கு வந்தால் வரவேற்போம் என வெளிப்படையாகவே பேசி உள்ளனர். ஆனால், திமுக கூட்டணியில் தான் இருப்போம், இது கொள்கை அடிப்படையிலான கூட்டணி என திட்டவட்டமாகக் கூறி வருகிறார் திருமாவளவன்.

இந்நிலையில் அண்மையில் பாஜக அரசு கொண்டு வந்த வக்பு திருத்தச் சட்ட மசோதாவை அதிமுக உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்திருப்பது பாராட்டுக்குரியது என திருமாவளவன் தெரிவித்திருந்தார். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் நிர்ப்பந்தத்தின் பேரில் தான் கூட்டணியில் இருக்கிறார்கள், சுதந்திரமாக செயல்பட முடியவில்லை என எடப்பாடி பழனிசாமி விமர்சித்தது பற்றி இன்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு பதில் அளித்துப் பேசிய திருமாவளவன் எடப்பாடி பழனிசாமியை “இலவு காத்த கிளி” என விமர்சித்துள்ளார்.