நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற தமிழ்நாடு அரசு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக இன்று அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்தால் நீட் தேர்வில் விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது.” என கூறியுள்ளார்.
நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் முன்மொழிந்தார்:
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை முறையில் தமிழ்நாட்டிற்கு “நீட்” தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்தவேண்டும் என்று இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகத் தீர்மானிக்கிறது.
இந்தவகையில், “நீட்” தேர்வு முறையை எதிர்த்து, கடந்த ஜுலை 2023ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசால் மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுத்துள்ள வழக்கினைத் தீவிரமாக முன்னெடுத்துச் செல்வது, நமது சட்டமுன்வடிவிற்கு ஒன்றிய அரசு ஒப்புதல் தர மறுத்துள்ளதை எதிர்த்து, தேவைப்படின், புதிய வழக்கு ஒன்றினை மாண்பமை உச்சநீதிமன்றத்தில் தொடுப்பது உள்ளிட்ட அனைத்து சட்டபூர்வ நடவடிக்கைகளையும், சட்டவல்லுநர்களுடன் கலந்தாலோசனை செய்து மேற்கொள்வதென ஒருமனதாகத் தீர்மானிக்கப்படுகிறது.
இக்கூட்டத்தில் பங்கேற்ற கட்சிகளின் பிரதிநிதிகள் மேற்படி தீர்மானத்தை வரவேற்றுப் பேசியதுடன், நீட் தேர்வு முறையினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்தும், நீட் தேர்வில் நடைபெறும் முறைகேடுகள் மற்றும் குளறுபடிகள் குறித்தும் பேசினர். பின்னர், நீட் விலக்கு தொடர்பாக தமிழ்நாடு அரசு எடுக்கும் அனைத்துவிதமான நடவடிக்கைகளுக்கும், சட்டப் போராட்டத்திற்கும் உறுதுணையாக இருப்போம் என்று உறுதி அளித்தனர்.
அத்துடன், தமிழ்நாடு சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டு நிலுவையில் இருந்த சட்டமுன்வடிவுகள் தொடர்பான வழக்கில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த சட்டரீதியான நடவடிக்கைகளால், உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசுக்குச் சாதகமாக தீர்ப்பு கிடைக்கப்பெற்றுள்ளதைச் சுட்டிக்காட்டி, இந்த நீட் விலக்கு தொடர்பான வழக்கிலும் தமிழ்நாடு அரசு வெற்றி பெறும் என்று தங்களது நம்பிக்கையை வெளிப்படுத்தினர்.
பின்னர், துணை முதலமைச்சர் முன்மொழியப்பெற்ற தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. இறுதியாக,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் நன்றியுரை ஆற்றினார்.
இந்த அனைத்து கட்சி கூட்டத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியதாவது:-
உச்ச நீதிமன்ற தீர்ப்பு மாபெரும் நம்பிக்கையை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் தொடர்ந்தால் நீட் தேர்வில் விலக்கு பெற முடியும் என்கிற நம்பிக்கை உள்ளது. தமிழ்நாடு மாணவர்களின் கல்வியை சிதைக்கும் நீட் தேர்வை ஆரம்பத்தில் இருந்து திமுக எதிர்த்து வருகிறது. பொதுவாக நுழைவு தேர்வு விளிம்பு நிலை மாணவர்களை பாதிக்க செய்கிறது. பள்ளி கல்வி மதிப்பெண் அடிப்படையில் செல்ல வேண்டும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டுள்ளேன். இதில் யாருக்கும் மாற்றுக்கருத்து இருக்காது என்று நம்புகிறேன்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி மாநில அளவில் நடைபெற்று வந்த நுழைவுத் தேர்வுகளை கடந்த 2006 ஆம் ஆண்டு தனி சட்டம் இயற்றி அகற்றினார். அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதலை பெற்று, கல்லூரி மாணவர் சேர்க்கையில் ஏழை, எளிய மாணவர்களின் வாய்ப்பை உறுதி செய்தார். இதனடிப்படையில் தான் தமிழ்நாட்டில் மருத்துவ கல்வி மாணவர் சேர்க்கையில் நடைபெற்ற நம்முடைய மாணவர்களுக்கு மருத்துவ கல்வி படிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்த மருத்துவர்களால் தான் மருத்துவத்துறையில் நாட்டிலேயே தமிழ்நாடு முன் உதாரணமாக விளங்குகிறது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றிய அரசு நீட் தேர்வு திருத்த சட்டம், தேசிய மருத்துவ ஆணைய சட்டம் ஆகியவை மூலம் மருத்துவ கல்விக்கான மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வை கொண்டு வந்தது. இது மாணவர்களை வெகுவாக பாதிக்கிறது.
மாநில அரசுகளால் தொடங்கப்படும் மருத்துவக் கல்லூரிகளில் எப்படி மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்கிற உரிமையை மாநில அரசிடம் இருந்து ஒன்றிய அரசு பறித்தது. நுழைவுத் தேர்வு என்பது வசதி வாய்ப்பு இருப்போருக்கு மட்டுமே சாதகமாக இருப்பதுதான் நீட் தேர்வின் அநீதி. இதற்கு எதிராக மக்கள் மன்றத்தில் நாம் போராடினோம். 2021 ஆம் ஆண்டு திமுக ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் சட்ட போராட்டத்தில் இறங்கினோம். ஒன்றிய அரசால் நடத்தப்படும் நீட் தேர்வில் சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை கண்டறிந்து அறிக்கை வழங்க, ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே ராஜன் தலைமையில் ஒரு குழு அமைத்தோம். சமுதாயத்தில் பின் தங்கிய மாணவர்களின் மருத்துவக் கனவுக்கு பெரும் கனவுக்கு பெரும் இடையூறாகவும், சமூக பொருளாதாரத்தில் வளம் மிகுந்த பிரிவினருக்கு சாதகமாகவும் நீட் தேர்வு இருப்பதாக குழு தெரிவித்தது. எனவே 2006 ஆம் ஆண்டு தமிழ்நாடு தொழில்சார் கல்வி நிறுவனங்களில் சேர்க்கை சட்டம் மாதிரியான ஒரு சட்டத்தை நிறைவேற்றி குடியரசுத் தலைவரிடம் ஒப்புதல் பெற இந்த குழு பரிந்துரை செய்தது. இந்த விரிவான பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை மேற்கொள்ள அமைக்கப்பட்ட அரசு செயலாளர்கள் குழு, நீட் விலக்கு சட்டத்தை உருவாக்க பரிந்துரை செய்தது.
அதன் தொடர்ச்சியாக நீட் தேர்வு ரத்து செய்யும் சட்டத்தை 13.9.2021 நான் முன் மொழிந்தேன். அந்த சட்ட முன் வடிவை குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக மாநில ஆளுநருக்கு அனுப்பினோம். அந்த சட்ட முன் வடிவை ஆளுநர் உடனடியாக குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்திருக்க வேண்டும். ஆனால் அவர் தன்னுடைய அரசியல் சட்ட கடமைகளை செய்யாமல், அரசியல் செய்ய தொடங்கினார் என்பதை வேதனையுடன் பதிவு செய்கிறேன். நாமும் சளைக்காமல் அந்த சட்டத்துக்கு ஒப்புதல் பெற கடுமையான சட்டப் போராட்டம் நடத்தினோம். இந்நிலையில் அதை ஆளுநர் திருப்பி அனுப்பினார். 5.2.2022 தேதியில் இதே மாதிரியான சட்டமன்ற அனைத்துக் கட்சி ஆலோசனை கூட்டத்தை நடத்தினோம். அதில் சட்ட முன் வடிவை மீண்டும் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்ப ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றினோம்.
அதன் பிறகு தமிழ்நாடு சட்டமன்றத்தில் வரலாற்று சிறப்புமிக்க கூட்டத்தில் இந்த சட்ட முன் வடிவு 8.2.2022 மீண்டும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக ஆளுநருக்கு மீண்டும் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இதுதொடர்பாக ஆளுநரை நான் நேரில் சந்தித்து நினைவுபடுத்தினேன். பிரதமர் மற்றும் உள்துறை அமைச்சரை சந்தித்தும் இந்த சட்ட முன் மொழிவுக்கு விரைவில் ஒப்புதல் வழங்க வலியுறுத்தினேன். அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் குடியரசுத் தலைவர் அலுவலகத்துக்கு நேரடியாக சென்று மனு அளித்தனர். இந்த தொடர் முயற்சிகளுக்கு பலனாக நாம் நிறைவேற்றிய வரலாற்று சிறப்பு மிக்க நீட் விலக்கு சட்ட முன் மொழிவை ஒன்றிய உள்துறை அலுவலகத்துக்கு ஆளுநர் அனுப்பினார் என்ற செய்தியை 4.5.2022 சட்டமன்றத்தில் நான் அறிவித்தேன்.
நீட் தேர்வு விலக்கு போராட்டத்தின் அடுத்தகட்டமாக ஒன்றிய அரசை வலியுறுத்தி, இந்த சட்ட முன் வடிவுக்கு குடியரசுத் தலைவர் ஒப்புதல் பெறுவதற்கு எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டன. இதுகுறித்து ஒன்றிய அரசு சுகாதாரத்துறை, ஆயுஷ், உள்துறை, உயர்கல்வி உள்ளிட்ட பல்வேறு அமைச்சகங்களுக்கு தமிழ்நாடு அரசின் செயல் விளக்கங்களை அனுப்பினோம். இதை எல்லாம் ஏற்காமல் ஒன்றிய அரசு மாணவர்களுக்கு பெரும் பேரிடியாய் நம்முடைய நீட் விலக்கு சட்ட முன் வடிவை ஏற்க குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிக்க மறுத்துவிட்டார் என்பதை சில நாட்களுக்கு முன்பு சட்டமன்றத்தில் வேதனையுடன் அறிவித்தேன். ஒன்றிய அரசு நம் கோரிக்கையை நிராகரித்திருக்கலாம். ஆனால் நீட் தேர்வை அகற்றுவதற்கான நம்முடைய போராட்டம் எந்த வகையிலும் ஓய்ந்துவிடவில்லை. இந்தப் போராட்டத்தின் அடுத்தகட்டமாக கலந்தாலோசிப்போம் நாம் எடுக்க வேண்டிய சட்டபூர்வமான நடவடிக்கைகள் குறித்து, சட்ட வல்லுநர்களிடம் கலந்து ஆலோசிக்கப்படும் என்று சட்டமன்றத்தில் அறிவித்தேன். அந்த வகையில் இந்தப் பிரச்னையில் நாம் அடுத்தகட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து உங்களின் மேலான ஆலோசனைகளை வழங்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
நீட் தேர்வு என்பது யாரோ தங்களின் சுய நலத்துக்காக ஒன்றிய அரசை தவறாக வழிநடத்தி நடத்தும் தேர்வு. அதையும் முறையாக நடத்தவில்லை என்பது குறித்து பல்வேறு மாநிலங்களில் சிபிஐ வழக்குகளின் மூலம் தெரியவந்துள்ளது. நேற்று உச்ச நீதிமன்றதில் வெளியான தீர்ப்பு நம்பிக்கை கொடுத்துள்ளது. சட்டப் போராட்டத்தை தொய்வில்லாமல் நடத்தினால் நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.