டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்புவதற்காகவே நீட் விவகாரத்தை முதல்வர் ஸ்டாலின் மீண்டும் கையில் எடுத்துள்ளார் என மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் குற்றம்சாட்டினார்.
நீலகிரி மாவட்டத்துக்கு வந்த மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஊட்டியில் உள்ள முகாம் அலுவகத்தில் பாஜக மண்டல் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய கலந்து கொண்டார். இந்தக் கூட்டத்தில் 2026 சட்டப்பேரவைத் தேர்தல் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது அவர், மூத்த காங்கிரஸ் அரசியல்வாதியும் பா.ஜ.க-வைச் சேர்ந்த தமிழிசை சுவுந்தரராஜனின் தந்தையுமான குமரி அனந்தனின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழக மக்களை குழப்பத்திலும் திசை திருப்புவதிலும் குறியாக இருக்கிறது தி.மு.க அரசு. காங்கிரஸ் கட்சியும் தி.மு.கவும் இணைந்து தான் நீட் தேர்வை கொண்டு வந்தனர். அப்போது மத்தியில் அமைச்சர்களாக இருந்த ஆ.ராசா முதல் டி.ஆர்.பாலு வரை யாரும் நீட் தேர்வை எதிர்க்கவில்லை. இன்றைக்கு நீட்டை எதிர்ப்பதாகச் சொல்லி நாடகமாடி வருகின்றனர்.
நீட் தேர்வுக்கு மாணவர்களை நாடு முழுவதும் தற்போது தயார் செய்து வருகிறோம். அரசு பள்ளிகளில் பயின்று வரும் பழங்குடியின மற்றும் பட்டியல் சமுதாய மாணவர்கள் அதிக அளவில் நீட் தேர்வில் வெற்றி பெற்று வருகின்றனர். இந்த சமயத்தில் அனைத்துக் கட்சிகள் கூட்டம் என்ற பெயரில் போலியான நாடகத்தை முதல்வர் ஸ்டாலின் அரங்கேற்றி வருகிறார். டாஸ்மாக்கில் நடைபெற்றிருக்கும் மெகா முறைகேட்டை திசை திருப்புவதற்கான செயலாகவே இதை பார்க்க வேண்டி இருக்கிறது.
பிரதமர் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளாததற்கு தமிழக முதல்வர் தமிழக மக்களிடையே பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். உதகை மருத்துவக் கல்லூரி உட்பட 11 மருத்துவக் கல்லூரிகளை 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். அப்படி ஏற்கெனவே தொடங்கி வைக்கப்பட்ட ஒரு மருத்துவக் கல்லூரியை மீண்டும் வந்து தொடங்கி வைத்த முதலமைச்சரின் நாடகத்தை எப்படி மக்கள் ஏற்றுக்கொள்ள முடியும்.
மேலும், அன்றைக்கு வளர்ச்சிக்கான ஓர் அடையாள சின்னமான இந்தியாவின் தொழில்நுட்பத்தில் பாம்பன் பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார். அதேபோல அன்றைக்கு கிட்டத்தட்ட ரூ.8300 கோடிக்கான திட்டங்கள் தமிழ்நாட்டில் தொடங்கி வைத்தார். அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்கும் விதமாக முதல்வர் ஸ்டாலின் செயல்பட்டது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
இ-பாஸ் நடைமுறையால் பொதுமக்களும் சுற்றுலா பயணிகளும் பாதிக்கப்படுவதாக வணிகர் சங்கத்தினர் சந்தித்து மனு அளித்துள்ளனர். இந்த விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளதால் அதற்கு சட்டரீதியாக அனைத்து உதவிகளையும் செய்ய தயார். சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பாதிக்காதவாறு அடிப்படை வசதிகள் ஆன பார்க்கிங், சாலை, குடிநீர் போன்றவற்றை மேம்படுத்தி வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய வேண்டும். வக்பு வாரிய சட்ட திருத்தத்தால், வாரியத்தை மேலாண்மை செய்யவும் நடைமுறைபடுத்தவும் எளிதாக உள்ளது. இந்த சட்ட திருத்தத்தை இஸ்லாமியர்கள் ஏற்கொண்டு, வரவேற்றுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.