கடந்த 2 வருடங்களாக தலைமறைவாக இருந்து வந்த அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரை 2 வருடங்களாக அமலாக்கத்துறையினர் வலைவீசித் தேடி வந்த நிலையில் இன்று கோர்ட்டில் நேரில் ஆஜராகி உள்ளார் அசோக் குமார். சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கில் அசோக் குமார் மற்றும் அவருடைய உதவியாளர்களுக்கு ஏற்கனவே சம்மன் அனுப்பப்பட்டிருந்த நிலையில் இன்று நேரில் ஆஜராகியுள்ளார் அசோக் குமார்.
கடந்த ஜனவரி மாதம் அமலாக்கத்துறை சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அசோக் குமார் உள்ளிட்ட 13 பேர் மீது போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்த வழக்கில் துணை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இதை ஆராய்ந்த முதன்மை அமர்வு நீதிமன்றம் ஏப்ரல் 9 ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று கடந்த மார்ச் 26 ஆம் தேதி அசோக் குமாருக்கு சம்மன் அனுப்பியது. இந்தநிலையில், அசோக் குமார் இன்று சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.
கடந்த 2011- 2015 ஆம் ஆண்டு காலகட்டத்தில் போக்குவரத்து துறை அமைச்சராக பதவி வகித்த செந்தில் பாலாஜி, போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்திருந்தனர். இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜியுடன் 2,222 பேர் குற்றம் சாட்டப்பட்டவர்களாக சேர்க்கப்பட்டிருந்தனர். இதில், அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்ந்து ஆஜராகி வந்த நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 2,222 பேரில் கடந்த ஜனவரி 6 ஆம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட 150 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு அவர்கள் ஆஜராகி வந்தனர்.
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக சட்ட விரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை பதிவு செய்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த வழக்கில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடந்த 2024 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்தது. அண்மையில் இந்த வழக்கில் அமலாக்கத்துறை சார்பில் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள கூடுதல் குற்றப் பத்திரிகையில், அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார், முன்னாள் உதவியாளர் சண்முகம் உள்ளிட்ட 13 பேரின் பெயர்கள் இடம் பெற்றிருந்தன.
கடந்த 2023 ஆம் ஆண்டு அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் விசாரணைக்கு அழைக்கப்படுவதற்கு முன்பே, அவரது தம்பி அசோக் குமாருக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. ஆனால், அவர் எந்த சம்மன்களுக்கும் ஆஜராகவில்லை. அதனால் அவரை தேடிக் கொண்டிருக்கிறோம் என அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் தெரிவித்தது. இதற்கிடையே செந்தில் பாலாஜி சுமார் ஒரு வருடத்திற்கு மேல் சிறையில் இருந்துவிட்டு, கடந்த ஆண்டு செப்டம்பரில் உச்சநீதிமன்றத்தால் ஜாமீன் பெற்று வெளியே வந்தார். அதன்பிறகும் அசோக் குமார் ஆஜராகவில்லை. செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்ட போது தலைமறைவான அசோக் குமார், சுமார் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு தற்போது நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.