மத்திய அமைச்சர் அமித் ஷா நாளை தமிழகம் வருகிறார்!

மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நாளை(ஏப். 10) இரவு தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிகார் மாநிலத்தில் நிகழாண்டு இறுதியிலும், மேற்கு வங்கம் மற்றும் தமிழகத்தில் அடுத்த ஆண்டும் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த மூன்று மாநிலங்களுக்கும் மத்திய அமைச்சர் அமித் ஷா சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாஜக நிர்வாகிகளை சந்திக்கவுள்ளதாக முன்னதாக தகவல் தெரியவந்தது.

தமிழகத்தைப் பொருத்தவரை எதிர்க்கட்சியான அதிமுகவுடன் பாஜக கூட்டணி அமைத்து 2026 பேரவைத் தோ்தலைச் சந்திக்கும் என எதிர்பாா்க்கப்படுகிறது. கடந்த மாதம் அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தில்லி சென்று அமித் ஷாவை சந்தித்த பிறகு இரு கட்சிகளும் கூட்டணி அமைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்திருப்பதாகக் கருதப்படுகிறது.

அதிமுகவுடன் கூட்டணிப் பேச்சு தொடர்பாகவும், தமிழக பாஜக தலைவரை தேர்ந்தெடுப்பதற்காகவும் அமித் ஷா தமிழகம் வருகை தரவுள்ளதாகக் கூறப்படுகிறது. நாளை மறுநாள்(ஏப். 11) காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு தரப்பினரையும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கவுள்ளார்.

இந்த அரசியல் சூழலில் அமித் ஷாவின் தமிழக வருகை முக்கியத்துவம் பெற்றுள்ளது.