போதை பொருள் விற்பனைக்கு கிரைண்டர் ஆப்பை போதை பொருள் விற்பனை கும்பல் பயன்படுத்தி வருவதால், கிரைண்டர் ஆப்பை தடை செய்ய வேண்டும் என்று சென்னை போலீஸ் கமிஷனர் அருண் தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
சென்னையில் போதை பொருள் விற்பனை தடுக்க போலீஸ் கமிஷனர் அருண் தனியாக ‘போதை பொருள் நுண்ணறிவு தடுப்பு பிரிவு’ என தனிப்பிரிவை உதவி கமிஷனர் தலைமையில் தொடங்கி, போதை பொருட்களுக்கு எதிராக நடவடிக்கை எடுத்து வருகிறார். அதேபோல் சென்னையில் போதை பொருள் விற்பனை செய்த வழக்கில் கடந்த ஒரு மாதத்தில் நைஜீரியா, சூடான் ஆகிய நாடுகளை சேர்ந்த 20க்கும் மேற்பட்ட நபர்கள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் போதை பொருட்களை விற்பனை செய்ய ‘கிரைண்டர்’ ஆப் மூலம் தடையின்றி விற்பனை செய்யப்பட்டு வருவது தெரியவந்துள்ளது.
இந்த கிரைண்டர் ஆப்களை அதிகளவில் ஓரினச்சேர்க்கையாளர்கள் தான் பயன்படுத்தி வருகின்றனர். இதனால் போதை விற்பனை கும்பல் இந்த கிரைண்டர் ஆப்பை பயன்படுத்தி தடையின்றி மெத்தப்பெட்டமைன் விற்பனை செய்யப்பட்டு வருவது விசாரணையின் மூலம் உறுதியாகியுள்ளது. இதையடுத்து சென்னை பெருநகர காவல்துறை கமிஷனர் அருண், போதை பொருள் விற்பனைக்கு முக்கிய பங்கு வகிக்கும் கிரைண்டர் ஆப்பை தடை செய்ய தமிழக அரசுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அந்த கடிதத்தில் கஞ்சா, மெத்தப்பெட்டமைன், ஹெராயின் போன்ற போதை பொருட்கள் விற்பனை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட நபர்கள் அனைவரும் கிரைண்டர் ஆப் மூலம் தான் சென்னையில் போதை பொருள் விற்பனை செய்யப்பட்டு வருவது உறுதியாகி உள்ளது. எனவே தமிழக அரசு கிரைண்டர் ஆப்பை தடை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். என்று கடிதம் எழுதியுள்ளதாக உயர் போலீசார் தெரிவித்துள்ளனர்.