தெய்வீக கலையான வள்ளி கும்மியை மத்திய அமைச்சர் எல் முருகன் கொச்சைப்படுத்தி பேசியதாக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் குற்றம்சாட்டி உள்ளார்.
கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி தலைவர் ஈஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
இன்றைய தினம் பிரபல நாளிதழில் ஒன்றில் ஒன்றிய அமைச்சர் முருகன் முருக பெருமானை வாழ்த்தி பாடுகின்ற வள்ளி முருகன் வழிபாடுகளை வள்ளி கும்மியாக நடத்துகின்ற நிகழ்ச்சியை கொச்சைப்படுத்தி பேசியிருப்பது கண்டனத்திற்குரியது. தமிழக பாஜக தலைவராக இருந்த போது முருகனுக்கு வேல் எடுத்து ஊர்வலம் சென்ற முருகன் இன்றைக்கு வள்ளி கும்மியை மற்ற நடனங்களோடு இணைத்து ஒரு நடனம் என்ற பார்வை பார்த்திருப்பது கொங்கு மண்டல மக்களிடையே பெரும் வேதனையை ஏற்படுத்தியிருக்கிறது.
16 ஆயிரம் பெண்கள் கலந்துகொண்டு கின்னஸ் சாதனை நிகழ்த்திய நிகழ்ச்சிக்கான பாராட்டு விழாவிலே கலந்து கொண்ட தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுடைய செயல்பாடுகளை அரசியல் கண்ணோட்டத்தோடு பார்த்து விமர்சனம் செய்திருப்பது ஏற்புடையதல்ல. இந்தியாவிலேயே எந்த ஒரு நிகழ்ச்சியிலும் 16 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு இறைவனை வழிபடுகின்ற ஓர் அற்புதமான கலையை நிறைவேற்றாத நிலையில் உங்களுடைய பூர்வீகமான கொங்கு மண்டலத்தில் செய்து கின்னஸ் சாதனை பதிவேடுகளில் இடம் பெற்றிருப்பதை நீங்கள் பெருமையாக கருதவில்லை என்றாலும் இப்படி சர்வ சாதாரணமாக கொச்சைப்படுத்த வேண்டாம்.
வள்ளி கும்மி கலைஞர்களையும், கொங்கு மண்டல மக்களையும் அவமானப்படுத்தியிருக்கின்ற ஒன்றிய அமைச்சர் எல் முருகன் மக்களிடத்தில் மன்னிப்பு கேட்க வேண்டும். அதோடு மட்டுமில்லாமல் நீலகிரி மாவட்டத்திற்கு பயன் தரப் போகிற ஊட்டி அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரி திறப்பு விழாவை அரசு விழாவாக பார்க்காமல் அது ஓர் அரசியல் கட்சி நிகழ்வு என்று குறிப்பிட்டு இருப்பது வருத்தத்திற்குரியது. உங்களால் தமிழகத்திலே கால் ஊன்ற முடியவில்லை என்ற ஆதங்கத்தில் இப்படியெல்லாம் பேசுவதை தவிர்க்க வேண்டும். வள்ளி கும்மி சாதனை பெருமையை உணர்ந்துதான் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நீலகிரி மாவட்ட நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு விமான நிலையத்திற்கு செல்லும் பொழுது அவசரத்திலும் நேரம் ஒதுக்கி வள்ளி கும்மி கலைஞர்களை பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார். உள்ளபடியே நீங்கள் அதற்கு முதலமைச்சரையும், சாதனை நிகழ்த்திய வள்ளி கும்மி கலைஞர்களையும் பாராட்டி அறிக்கை கொடுத்திருக்க வேண்டும்.
கொங்கு மண்டல மக்களுடைய கொந்தளிப்பை தான் கண்டன கருத்துக்களாக இங்கு நான் பதிவு செய்திருக்கிறேன். ஒன்றிய அமைச்சர் எல் முருகன் நாமக்கல் மாவட்டத்தை சார்ந்த நண்பர் என்கின்ற முறையில் நாகரீகத்தோடும் அன்போடும் கேட்கின்றேன், உங்கள் தவறை உணர்ந்து மக்களிடத்திலே பெருந்தன்மையோடு மன்னிப்பு கேட்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு ஈஸ்வரன் கூறியுள்ளார்.