நீட் எனும் அநீதியை ஒழிக்க தமிழ்நாடு போராடும். சுப்ரீம் கோர்ட்டு கொடுத்துள்ள தீர்ப்பின் ஒளியில், நீதிக்கான சட்டப்போராட்டத்தைத் தொடரவுள்ளோம் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
நீட் விலக்குச் சட்ட மசோதாவிற்கு மத்திய அரசு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்துள்ளது தொடர்பாக சென்னையில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சட்டமன்ற அனைத்துக் கட்சி தலைவர்களின் கலந்தாலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது.
மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வு முறையிலிருந்து விலக்கு அளிப்பதற்காகத் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை நிறைவேற்றிய சட்டமுன்வடிவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் தர மறுத்துள்ள நிலையில், இந்த விலக்கைப் பெறுவதற்காகத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து சட்டப் போராட்டத்தை நடத்த வேண்டும் என்று இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த நிலையில் நீட் எனும் அநீதியை ஒழிக்க தமிழ்நாடு போராடும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் அவர் கூறியுள்ளதாவது:-
தமிழ்நாட்டு மாணவர் நலனுக்கான நீட் விலக்கே நமக்கான இலக்கு என மக்கள் மன்றத்திலும், சட்டமன்றத்திலும், நீதிமன்றத்திலும் தொடர்ந்து போராடி வருகிறோம்.
தடைகள் பல கடந்து நாம் நிறைவேற்றிய சட்டமுன்வடிவுக்கு மத்திய ஆட்சியாளர்களின் கைப்பாவையான கவர்னர் முட்டுக்கட்டையாக இருந்தார். நேற்று சுப்ரீம் கோர்ட்டு கொடுத்துள்ள தீர்ப்பின் ஒளியில், நீதிக்கான சட்டப்போராட்டத்தைத் தொடரவுள்ளோம்!
நோய் பரப்பிடும் கிருமியை விட்டுவிட்டு, நோய்க்கான மருந்தினைக் கண்டறியப் போராடும் மருத்துவரைக் குற்றம் குறை சொல்பவர்களது எண்ணம் கிருமியைப் பாதுகாக்க வேண்டும் என்பதைத் தவிர வேறில்லை என்பதை நாட்டு மக்கள் உணர்ந்தே இருக்கிறார்கள். நீட் எனும் அநீதியை ஒழிக்க தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! இவ்வாறு அவர் கூறியுள்ளார்.