மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணாவுக்கு 18 நாட்கள் தேசிய புலனாய்வு அமைப்பின் 18 நாள் காவலில் வைக்க சிறப்பு என்ஐஏ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2008-ம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவூர் ராணா (64) கடந்த 2009-ம் ஆண்டு அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானைச் சேர்ந்த அவரை இந்தியாவுக்கு அழைத்து வர மத்திய அரசுநடவடிக்கை மேற்கொண்டது. இந்தியாவின் கோரிக்கையை ஏற்ற அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த உத்தரவிட்டது. இதற்கு தடை கோரி ராணா மேற்கொண்ட சட்ட ரீதியான முயற்சிகள் அனைத்தும் தோல்வி அடைந்தன.
இந்நிலையில், அவரை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்காக தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) மற்றும் உளவு அமைப்பான ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு பிரிவு (ரா) அதிகாரிகள் அடங்கிய குழு அமெரிக்கா சென்றது. இதையடுத்து, அமெரிக்க அதிகாரிகள் ராணாவை இந்திய குழுவினரிடம் நேற்று முன்தினம் ஒப்படைத்தனர். இதையடுத்து, ராணா இந்திய விமானப்படைக்கு சொந்தமான சிறப்பு விமானத்தில் நேற்று டெல்லிக்கு அழைத்து வரப்பட்டார்.
விமான நிலையம் வந்தடைந்த அவரை என்ஐஏ அதிகாரிகள் முறைப்படி கைது செய்தனர். பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவரை 20 நாட்கள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்து விசாரிக்க அதிகாரிகள் அனுமதி கோரினர். அவர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிமன்றம் ராணாவை 18 நாட்கள் என்ஐஏ காவலில் வைத்து விசாரிக்க உத்தரவிட்டுள்ளது.
இதனிடையே, ராணா மீதான வழக்கை மும்பையிலிருந்து டெல்லி சிறப்பு நீதிமன்றத்துக்கு மாற்ற வேண்டும் என்று தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) ஏற்கெனவே கோரிக்கை வைத்திருந்தது. இதை ஏற்றுக் கொண்ட டெல்லி மாவட்ட நீதிமன்ற நீதிபதி விமல் குமார் யாதவ் கடந்த ஜனவரி 28-ம் தேதி மும்பை நீதிமன்ற ஊழியர்களுக்கு ஒரு உத்தரவு பிறப்பித்திருந்தார். அதில், மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கு விசாரணை தொடர்பான ஆவணங்களை அனுப்பி வைக்குமாறு கூறியிருந்தார். இதன்படி, அந்த ஆவணங்கள் டெல்லி மாவட்ட நீதிமன்றத்தில் சமீபத்தில் ஒப்படைக்கப்பட்டன. இதையடுத்து, ராணா மீதான வழக்கு டெல்லியில் நடைபெறும்.
அமெரிக்காவிலிருந்து அழைத்துவரப்பட்ட தஹாவூர் ராணா டெல்லி பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இதையடுத்து, நீதிமன்ற வளாக பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக, துணை ராணுவப் படையினர் மற்றும் டெல்லி போலீஸார் அப்பகுதியில் குவிக்கப்பட்டனர்.