நாகலாந்தில் ஆயுத போராட்டம் இல்லை: ஆளுநர் இல.கணேசன்!

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு காது சரிவர கேட்கவில்லை. மிஷின் மாட்ட வேண்டும்” என்று இல.கணேசன் நகைச்சுவையாக கூறினார்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடிக்கு நேற்று வந்த நாகலாந்து ஆளுநர் இல.கணேசன், பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவை அவரது இல்லத்தில் சந்தித்தார். பின்னர் இல.கணேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

நாகலாந்து மிக குளிர்ச்சியாகவும், இயற்கை எழில் நிறைந்த மாநிலமாகவும் உள்ளது. இந்த மாநிலத்தில் முந்தைய காலத்தில் ஆயுதம் ஏந்திய போராளிகள் இருந்தனர். மோடி பிரதமரான பிறகு போராளிகளுக்கும், அரசுக்குமிடையே ஒப்பந்தம் ஏற்பட்டது. இனி ஆயுதத்தை ஏந்த மாட்டோம் என்று போராளிகள் உறுதியளித்தனர். அதை உண்மையாக கடைப்பிடிக்கின்றனர். மற்றபடி, எல்லா மாநிலங்களிலும் இருப்பதுபோல சில பிரச்சினைகள் அங்கும் உள்ளன. அவற்றை மாநில முதல்வர்கள் தீர்த்துவைத்து வருகின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது, “எனக்கு காது சரிவர கேட்கவில்லை. மிஷின் மாட்ட வேண்டும்” என்று நகைச்சுவையாகக் கூறிவிட்டு, அங்கிருந்து சென்றுவிட்டார்.