தமிழ்நாட்டில் 2026ல் நடக்கவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வென்று தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சிக்கு வரும் என்று பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
தமிழக பாஜகவின் மாநில தலைவராக பாஜக சட்டமன்றக் குழு தலைவர் நயினார் நாகேந்திரன் பொறுப்பேற்றுள்ளார். 2 நாள் பயணமாக தமிழ்நாடு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வந்தார். இதனைத் தொடர்ந்து மாநில தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டு, நயினார் நாகேந்திரன் மட்டுமே விருப்ப மனுவை தாக்கல் செய்தார். அவர் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்ட நிலையில், இன்று மாநில தலைவருக்கான சான்றிதழ் அளிக்கப்பட்டது. சென்னையில் நடைபெற்ற விழாவில் மேள தாளங்கள் முழங்க அவருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விழாவில் பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பேசியதாவது:-
நம் அனைவரும் சேர்ந்து ஒரேயொரு முடிவுடன் அமர்ந்துள்ளோம். 2026 சட்டமன்றத் தேர்தலில் தீயசக்தி திமுகவை துடைத்தெறிந்து வீட்டிற்கு அனுப்ப வேண்டும். நம் கண் முன்னால் இருப்பது ஒரேயொரு இலக்கு தான். அந்த இலக்கை நோக்கி செல்லும் போது, சில தடைகற்கள் வருவது சாதாரணம். தேசிய ஜனநாயக கூட்டணியில் பலம் வாய்ந்த கட்சியாக அதிமுக இணைந்துள்ளது. இன்னும் சிறிய, பெரிய கட்சிகள் கூட்டணியில் இருக்கிறார்கள். தேசிய அளவில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய ஜனநாயக கூட்டணியை வழிநடத்துகிறார். தமிழ்நாட்டில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் 2026 சட்டமன்றத் தேர்தலை சந்திக்க போகிறோம். நமது இலக்கும், பாதையும் சரியாக அமைந்துள்ளது. இனி பயணிக்க வேண்டிய தொண்டர்கள் நாம்தான். ஒரு தலைவனை அந்த கட்சி சரியான நேரத்தில் தேடி கொள்ளும்.
தமிழக பாஜகவை வழிநடத்தியது எனது பாக்கியம். யார் தலைவராக வந்தாலும், அவர்களுடன் பயணிக்கும் கட்சிதான் பாஜக. 4 ஆண்டுகளுக்கு முன் நான் பதவிக்கு வந்த போது, என்னை பற்றி நிறைய பேருக்கு தெரியாது. என்னைவிட தகுதியும், திறமையும் வாய்ந்தவர்கள் இருந்தார்கள். ஆனாலும் முகம் சுழிக்காமல் என்னுடன் தொண்டர்களாக இருந்தார்கள். அதேபோல் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒருவர் பின்னால் நின்று வெற்றிபெற வேண்டும். தமிழக பாஜகவின் புதிய தலைவராக நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்படுகிறார். தமிழ்நாட்டிற்கு மத்திய அமைச்சர் அமித் ஷா வந்த போது, தேசிய ஜனநாயக கூட்டணி பலமாகியுள்ளது. அவருக்கு பின் அணிவகுத்து நின்று தேசிய ஜனநாயக கூட்டணியை ஆட்சிக்கு கொண்டு வர பாடுபடுவோம். 2026ல் நிச்சயம் வெல்வோம் என்ற நம்பிக்கையை விதைத்திருக்கிறது. இவ்வாறு அவர் கூறினார்.