“தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அமமுக தொடர்கிறது; ஓபிஎஸ் தனிமைப்படுத்தப்பட மாட்டார். ஒற்றைத் தலைமையின் கீழ் திரளாவிட்டாலும் திமுகவை வீழ்த்த வேண்டும் என்ற ஒற்றை குறிக்கோளுடன் ஓரணியில் திரண்டுள்ளோம்” என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
‘‘அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி தலைமையில் 2026 தமிழக சட்டப்பேரவை தேர்தலை சந்திக்க உள்ளோம். பாஜகவும், அதிமுகவும் இணைந்து தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைக்கும்’’ என்று சென்னையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று அறிவித்த நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தொட்டே இடம்பெற்றுள்ள அமமுகவின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் இன்று (சனிக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
நம்ம ஊரில் எதார்த்தமாக ஆஞ்சியோகிராம் செய்தால், அதனை எனக்கு நெஞ்சுவலி வந்துவிட்டது, ஹார்ட் பிராப்ளம் என சொல்லிவிடுகின்றனர். இதனை வைத்து சில செய்திகளை ஒளிபரப்பினீர்கள். ஆனால் உண்மை அதுவல்ல. எனக்கு நெஞ்சுவலியெல்லாம் இல்லை. இதெல்லாம் வரக்கூடாது என்பதற்காக முன்னெச்சரிக்கையாக ஆஞ்சியோகிராம் செய்தேன். கடவுளின் கிருபையால் 100 சதவீதம் இதயம் நல்லா இருக்கிறது. இன்னும் 30 ஆண்டுகள் மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்ற உறுதியோடு மருத்துவமனையில் இருந்து வெளியே வந்திருக்கிறேன்.
அம்மாவின் தொண்டர்கள் அவர்கள் எங்கிருந்தாலும் ஓரணியில் திரண்டு திமுக என்கிற தீய சக்தியை அழிப்பதற்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொன்னேன். அது தான் இப்போது நடந்து வருகிறது. யாரெல்லாம் திமுக கூட்டணி, திமுக ஆட்சிக்கு வரக்கூடாது, தொடரக்கூடாது என்று நினைக்கிறார்களோ.. அவர்கள் அனைவரும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வேண்டும் என்று சொன்னேன். அது தான் இப்போது நடக்கிறது. தேசிய ஜனநாயக கூட்டணி ஒரு கடல் மாதிரி.. தமிழ்நாடு என்று வரும்போது அம்மாவின் கட்சி தலைமை தாங்க வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். அதில் என்ன பிரச்சினை இருக்கிறது.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் உள்துறை அமைச்சர் பதில் சொல்லிவிட்டார். தீய சக்தி திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காகவும், மோடி கரத்தை மேலும் வலுப்படுத்தவும் நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிக்கிறோம். மோடி அணியில் நாங்கள் இருக்கிறோம். ஓ பன்னீர் செல்வமும் தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார். 2026 இல் திமுகவை வீழ்த்துவதற்கு அமமுக உறுதியாக இருக்கிறது.
திமுக – தவெக இடையே தான் போட்டி இருக்கும் என்று விஜய் கூறியிருப்பது அவருடைய கருத்து. 2021 சட்டமன்ற தேர்தலின் போதே, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எடப்பாடி பழனிசாமியிடம் என்ன பேசினார் என்பதை ஓபிஎஸ் மற்றும் வைத்திலிங்கம் தெளிவாக சொல்லிவிட்டனர். இதை நீங்கள் புரிந்துகொள்ள வேண்டும். ஓ பன்னீர் செல்வம் தனிமைப்படுத்தப்படவில்லை. அவர் தனிமைப்படுத்தப்பட மாட்டார். அம்மாவின் தொண்டர் அவர். அனைவரும் ஓரணியில் இணைந்து திமுகவை வீழ்த்த வேண்டும் என்று சொன்னேன். இவ்வாறு அவர் கூறினார்.