கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க டெல்லி ஐகோர்ட்டு உத்தரவு!

சீன விசா முறைகேடு வழக்கில் கார்த்தி சிதம்பரம் மனுவுக்கு அமலாக்கத்துறை பதில் அளிக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாபில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டம் தொடர்பாக, சீனர்களுக்கு விசா வாங்கி கொடுக்க ரூ.50 லட்சம் லஞ்சம் பெற்றதாக காங்கிரஸ் எம்.பி.கார்த்தி சிதம்பரத்துக்கு எதிராக சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. இதன் அடிப்படையில், கார்த்தி சிதம்பரம், பாஸ்கர ராமன் உள்ளிட்டோருக்கு எதிராக சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரி கார்த்தி சிதம்பரம் டெல்லி ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனுவை நீதிபதி ரவீந்தர் துடேஜா விசாரித்தார். கார்த்தி சிதம்பரத்தின் சார்பில் மூத்த வக்கீல் சித்தார்த் லுத்ரா ஆஜராகி முன் வைத்த வாதங்களைப் பதிவு செய்து கொண்ட நீதிபதி, சீன விசா முறைகேடு வழக்கில் குற்றச்சாட்டு பதிவை தள்ளிவைக்க கோரும் கார்த்தி சிதம்பரத்தின் மனுவுக்கு பதில் அளிக்க அமலாக்கத்துறைக்கு உத்தரவிட்டார். மேலும், விசாரணையை மே 29-ந்தேதிக்கு தள்ளிவைத்தார். அதுவரை குற்றச்சாட்டு பதிவு மீதான வாதங்களை சிறப்பு கோர்ட்டு தள்ளிவைக்கவும் உத்தரவிட்டார்.