சிறந்த வாய்ப்புக்காக இந்திய இளைஞர்கள் காத்திருக்கின்றனர் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி, தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நாட்டில் உள்ள இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க கடந்த ஆண்டு வேலையுடன் கூடிய ஊக்கத் தொகை (இஎல்ஐ) திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதற்காக ரூ.10,000 கோடி ஒதுக்கப்பட்டது. ஆனால், இதுவரை வேலைவாய்ப்புகள் அதிகரிக்கப்படவில்லை. ஒதுக்கப்பட்ட தொகை எங்கே போனது?
நாட்டில் உள்ள பெரிய நிறுவனங்களின் மீது மட்டுமே பிரதமர் மோடிக்கு கவனம் உள்ளது. நாட்டின் வளர்ச்சியில் சிறு, குறு, நடுத்தர நிறுவனங்கள்தான் முக்கிய பங்கு வகிக்கின்றன. அவற்றை மத்திய அரசு புறக்கணிக்கிறது. கடந்த 2024-ம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு முன்பு, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க இஎல்ஐ திட்டம் கொண்டு வரப்படும் என்று பாஜக அறிவித்தது. ஆனால் ஆட்சி பொறுப்பேற்று ஓராண்டாகியும் அந்த திட்டம் குறித்து இதுவரை எந்த விளக்கமும் தரவில்லை.
பெரு நிறுவனங்களை மட்டுமே கவனத்தில் கொண்டால், வேலைவாய்ப்புகளை உருவாக்க முடியாது. உள்நாட்டு உற்பத்தியும், இந்திய திறனையும் மனதில் கொண்டு, சிறு, குறு, நடுத்தர நிறுவனங்களுக்கு அதிக முக்கியத்துவம் தந்து முதலீடுகளை அதிகரிக்க வேண்டும். உள்ளூர் தயாரிப்புகளை ஊக்குவிக்க வேண்டும். நீங்கள் (பிரதமர் மோடி) தினமும் ஒரு ஸ்லோகனை வெளியிடுகிறீர்கள். ஆனால், சிறந்த வாய்ப்புக்காக இந்திய இளைஞர்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் கருத்துக்கு பாஜக கடும் கண்டனம் தெரித்துள்ளது. இதுகுறித்து பாஜக ஐ.டி. பிரிவு தலைவர் அமித் மால்வியா தனது எக்ஸ் பதிவில், பாஜக ஆட்சியில் உருவாக்கப்பட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு விவரங்கள், வேளாண் துறை வலிமைப்படுத்தியது, சேவை துறைகளை மேம்படுத்தியது போன்றவற்றின் பட்டியலை வெளியிட்டுள்ளார். மேலும், காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ ஆட்சியில் இந்திய பொருளாதாரம் எப்படி இருந்தது என்பதற்கான ஆதாரங்களையும் அமித் மால்வியா பட்டியலிட்டுள்ளார். பாஜக அரசின் சாதனைகளை திட்டமிட்டு உண்மைகளை திரித்து கூறுகிறது காங்கிரஸ் என்று அவர் கண்டனம் தெரிவித்துள்ளார்.