நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளராக்க வேண்டும்: சுப்பிரமணியன் சுவாமி!

தமிழகத்தில் மீண்டும் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்துள்ளதை பாஜகவின் மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி வரவேற்றுள்ளார். இந்த கூட்டணி வரும் சட்டசபை தேர்தலில் வெல்லுமா? என்பது பற்றி கருத்து தெரிவித்துள்ள அவர் முதல்வர் வேட்பாளராக நயினார் நாகேந்திரனை முன்நிறுத்தினால் பெரிய பலன் கிடைக்கும் என்று கூறி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை செயல்பட்டு வந்தார். தற்போது அவர் அந்த பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய தலைவராக திருநெல்வேலி பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். மேலும் தமிழகத்தில் மீண்டும் அதிமுக – பாஜக கூட்டணி அமைந்துள்ளது. கடந்த 2021ல் இந்த 2 கட்சிகளும் கூட்டணி அமைத்து இருந்தன. அதன்பிறகு இந்த கூட்டணி முறிந்தது. இப்போது 2026 சட்டசபை தேர்தலை மனதில் வைத்து இருகட்சிகளும் கைகோர்த்துள்ளன. பாஜக மாநில தலைவராக உள்ள அண்ணாமலைக்கும், அதிமுக தலைவர்களுக்கும் இடையே கருத்து மோதல் உள்ளது. இதனால் இந்த கூட்டணிக்கு இடையூறாக அண்ணாமலை இருக்க கூடாது என்பதற்காக அவரிடம் இருந்து பதவி பறிக்கப்பட்டுள்ளது. மேலும் அதிமுக தலைவர்களின் கோரிக்கையை தொடர்ந்து தான் அண்ணாமலைக்கு ‛கல்தா’ கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

அதிமுக – பாஜக கூட்டணி என்பது நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. சென்னை வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியை அருகே வைத்து கொண்டு இந்த கூட்டணி அறிவிப்பை வெளியிட்டார். 2026 சட்டசபை தேர்தலை அதிமுக தலைமையில் பாஜக எதிர்கொள்ளும் என்று கூறினார். இதனால் அதிமுக – பாஜக கூட்டணியை விரும்பிய இருகட்சிகளின் தலைவர்கள் ஹேப்பியாகி உள்ளனர். அதுமட்டுமின்றி இந்த கூட்டணியை முதல்வர் ஸ்டாலின் உள்பட எதிர்க்கட்சி தலைவர்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் தான் மீண்டும் தமிழகத்தில் பாஜக – அதிமுக கூட்டணி அமைந்து உள்ளது பற்றி பாஜகவின் மூத்த தலைவரும், தமிழகத்தை சேர்ந்தவருமான சுப்பிரமணியன் சுவாமி கருத்து தெரிவித்துள்ளார். இதுபற்றி சுப்பிரமணியன் சுவாமி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியுள்ளதாவது:-

நயினார் நாகேந்திரன் தலைமையில் மறுகட்டமைப்பு செய்யப்பட்டுள்ள பாஜக – அதிமுக கூட்டணி வரும் தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெறும். நயினார் நாகேந்திரனை முதல்வர் வேட்பாளராக முன்நிறுத்தும் பட்சத்தில் 3ல் 2 பங்கு இடங்களில் வெல்ல முடியும். இவ்வாறு சுப்பிரமணியன் சுவாமி கூறியுள்ளார்.