புரசைவாக்கம், திடீர்நகர் திட்டப்பகுதியில் நீண்டகாலமாக கிடப்பில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் திட்டத்தை திமுக அரசு எஞ்சியுள்ள ஓராண்டிற்குள்ளாவது நிறைவேற்ற வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
இதுகுறித்து நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளதாவது:-
சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் திடீர் நகர் திட்டப் பகுதியில் அரை நூற்றாண்டுக்கும் மேலாக 600க்கும் மேற்பட்ட குடும்பங்கள் எவ்வித பாதுகாப்புமற்ற குடிசைப்பகுதியில் வாழ்ந்து வருவது மிகுந்த மனவேதனை அளிக்கிறது. தாங்கள் வாழும் பகுதியிலேயே, தங்களுக்கு அடிப்படை வசதிகளுடன் கூடிய குடியிருப்புகள் அமைத்துத் தர வேண்டுமென்ற அம்மக்களின் கோரிக்கையானது மிக மிக நியாயமானது. தமிழ்நாட்டைத் தொடர்ச்சியாக 60 ஆண்டுகளாக ஆண்டுவரும் திராவிடக் கட்சிகள், தலைநகர் சென்னையில் வாழும் மக்களுக்குக்கூடத் தரமான குடியிருப்புகளை அமைத்துத்தராமல் தவிக்கவிடுவது வன்மையான கண்டனத்துக்குரியது.
கடந்த அதிமுக ஆட்சியின்போது திடீர்நகர் திட்டப் பகுதியில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் அடுக்குமாடிக் குடியிருப்புகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையிலும், இறுதிவரை அவை அமைத்துத்தரப்படவில்லை. அதன் பிறகு திமுக ஆட்சி அமைந்து 4 ஆண்டுகளாகியும் இன்றுவரை குடியிருப்புகள் அமைப்பதற்கான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதால், தங்களின் வாழ்வாதாரக் கோரிக்கையை வலியுறுத்தி போராடிப் போராடி சோர்வுற்ற அம்மக்கள் மிகுந்த ஏமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். திராவிடக் கட்சிகளின் ஆட்சியில் தலைநகர் சென்னையில் இருந்து பூர்வகுடி தமிழர்கள் திட்டமிட்டு வெளியேற்றப்பட்டுவரும் சதிச்செயல்களின் நீட்சியே அன்றி வேறில்லை.
ஆகவே, சென்னை எழும்பூர் தொகுதிக்குட்பட்ட புரசைவாக்கம் திடீர்நகர் திட்டப் பகுதியில் வாழ்ந்து வரும் அனைத்து குடும்பங்களுக்கும் அவர்கள் வாழும் பகுதியிலேயே அடிப்படை வசதிகளுடன் கூடிய தரமான குடியிருப்புகளைக் கட்டித்தர உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்நாடு அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.