தேர்தல் நேரங்களில் மட்டும் கச்சத்தீவு பற்றி பேசுகிறார்கள்: காளியம்மாள்!

தேர்தல் நேரங்களில் மட்டும் கச்சத்தீவு பற்றி பேசுகிறார்கள் என்று காளியம்மாள் குற்றஞ்சாட்டியுள்ளார்.

மத்திய பா.ஜ.க அரசின் மக்கள் விரோதப் போக்கைக் கண்டித்தும், தமிழ்நாடு அரசுக்கு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தியும் தமிழ்த் தேசத் தன்னுரிமைக் கட்சி சார்பில் நெல்லை வண்ணார்பேட்டையில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் காளியம்மாள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் காளியம்மாள் கூறியதாவது:-

என் நிலத்தில் இருந்து ஒரு பிடி மண் கூட எடுக்க முடியாது என்ற சினிமா டயலாக்குகளை கேட்டு இருப்பீர்கள். நிலம் மக்களின் உணர்வுகளோடு கலந்தது. அந்த வகையில் கச்சத்தீவு தமிழர்களுக்கானது. அது இலங்கை வசம் சென்றதும் தமிழக மீனவர்களின் மீன்பிடிக்கும் கடல் பகுதியையும் அந்த நாடு அபகரித்து விட்டது. இந்த கச்சத்தீவை மீட்க இதுவரை பேச்சுவார்த்தை நடந்ததா எனப்பார்த்தால் 15, 20 ஆண்டுகளுக்கு முன் 4 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. அதன் பிறகு தேர்தல் நேரங்களில் மட்டும் பேசி அரசியல் நாடகமாடி வருகிறார்கள். இவ்வளவு பெரிய தீவு கட்சத்தீவைப் பற்றி வெளிப்படையாக பேச ஆட்கள் இல்லை. கடலோடி மக்களுக்காக பேச நாதி இல்லை.

இந்தியாவில் இவ்வளவு பெரிய ராணுவம் உள்ளது. ஆனாலும் தமிழக கடல் எல்லையில் ஆயிரக்கணக்கான மக்களை பலி கொடுக்கிறது. இந்த பிரச்னையை தடுக்க ஆளுகின்ற எந்த கட்சியும் ஒரு முன்னெடுப்பு எடுக்கவில்லை. தேர்தல் வருகிறது என்ற உடன் ஆளாளுக்கு மீனவர்கள் பிரச்னை பற்றி பேசுகிறார்கள். கடல் எல்லையில் இரு நாடுகளுக்கு இடையே பிரச்னை ஏற்பட்டால் அது தொடர்பாக சட்டம் உருவாக்கி அதற்கு தீர்வு காணலாம். அதை அரசால் செய்யமுடியாதா?.

தமிழக மீனவர்களின் படகுகளை கடலில் மூழ்கடிக்கலாம் என இலங்கையில் விவாதிக்கிறார்கள். படகு என்பது மீனவர்கள் ஒவ்வொருவரின் உயிர். மீனவர்களுக்கு லட்சக்கணக்கில் அபராதம் விதிக்கிறார்கள். ஒவ்வொரு முறையும் இலங்கை அரசால் பாதிக்கப்படும் மீனவர்களின் பெயர்கள் மாறுகிறதே தவிர வேறு ஒன்றும் மாறவில்லை. மத்திய அரசிடம் எங்களிடம் பணம் இல்லை கொடுங்கள் என கெஞ்சவில்லை. நியாயமாக எங்களுக்கு சேர வேண்டிய தொகையை கொடுங்கள் என்றுதான் கூறுகிறோம்.

பொன்முடி சுயசிந்தனையுடன் பேசி உள்ளார். மேடையில் இப்படி பேசலாமா என கேட்டுக்கொண்டே பேசி இருக்கிறார். இப்படிப்பட்ட ஆட்களை கடுமையாக தண்டிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.