சரத்குமாருக்கு பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு!

அண்ணாமலை, வானதி சீனிவாசன், தமிழிசை சௌந்தரராஜன் உள்ளிட்டோரை தொடர்ந்து தற்போது சரத்குமாருக்கும் பாஜகவில் தேசிய பொதுக்குழு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

கடந்த 17 ஆண்டுகளாக தான் நடத்தி வந்த சமத்துவ மக்கள் கட்சியை பாஜகவுடன் கடந்த ஆண்டு சரத்குமார் இணைத்திருந்தார். இதற்கு பலனாக தேசிய ஜனநாயக கூட்டணியில் ராதிகா சரத்குமாருக்கு எம்பி சீட் வழங்கப்பட்டது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 12ம் தேதி யாரும் எதிர்பார்க்காத அந்த அறிவிப்பு வந்தது. அதாவது 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் சமத்துவ மக்கள் கட்சி இடம் பெறும் என்று ஏற்கெனவே சரத்குமார் அறிவித்திருந்தார். ஆனால் 12ம் தேதி திடீரென கட்சியை பாஜகவுடன் இணைத்துக்கொள்வதாக கூறி தொண்டர்களுக்கு ஷாக் கொடுத்தார். சரத்குமாரின் அரசியல் வாழ்க்கையில் இது முக்கிய திருப்பமாக பார்க்கப்பட்டது. இந்த செய்தி வெளியான அடுத்த 10 நாட்களில், அதாவது மார்ச் 22ம் தேதி, விருதுநகர் நாடாளுமன்ற தொகுதியில் என்டிஏ கூட்டணி சார்பில் ராதிகா சரத்குமார் போட்டியிடுவார் என்று அறிவிப்பு வெளியானது. தேர்தலும் நடந்தது. ஆனால் ராதிகா தோல்வியுற்றார். எதிர்பார்த்த அளவுக்கு கூட வாக்குகள் கிடைக்கவில்லை. எனவே பாஜகவில் முக்கிய பொறுப்பு வேண்டும் என்று சரத்குமார் தரப்பிலிருந்து கோரிக்கை வைக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. இக்கோரிக்கை மீது தலைமை செவி சாய்க்காமல் இருந்து வந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தல் நேரத்தில் சரத்குமார் தரப்பிலிருந்து அழுத்தம் கொடுத்ததாகவும், இதனையடுத்து தற்போது சரத்குமாருக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட்டிருப்பதாகவும் விவரமறிந்தவர்கள் கூறுகிறார்கள்.