தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்: தமிழிசை சவுந்தரராஜன்!

குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும்.. தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

தமிழகத்தின் புதிய பாஜக தலைவராக நயினார் நாகேந்திரன் பதவியேற்றுள்ளார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன் தினம் இதனை அறிவித்தார். தொடர்ந்து 2026 சட்டசபை தேர்தலில் அதிமுக பாஜக கூட்டணி அமைத்து போட்டியிடும் என்றும் அவர் தெரிவித்தார். அதிமுக தலைமையில் பாஜக கூட்டணி அமையும் என்று கூறியிருந்தார். புதிதாக பதவியேற்ற நயினார் நாகேந்திரனுக்கு பாஜக தலைவர்கள், நிர்வாகிகள் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள். முன்னாள் தமிழக பாஜக தலைவரான தமிழிசை சவுந்தரராஜனும் நயினார் நாகேந்திரனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் தாமரை மலரும்.. மலர்ந்தே தீரும்.. என்று அவர் கூறியுள்ளார். இது தொடர்பாக தமிழிசை கூறியிருப்பதாவது:-

நம் மாபெரும் இயக்கமாம்.. தமிழக பாரதிய ஜனதா கட்சியின்.. தலைவராக பொறுப்பேற்று இருக்கும்.. அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களுக்கு.. எனது மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.. நேற்று வரை கட்சியை.. பரபரப்பாகவும்.. சுறுசுறுப்பாகவும்.. இயக்கிக் கொண்டிருந்த.. தம்பி அண்ணாமலை அவர்களுக்கு.. எனது வாழ்த்துக்கள்.. நான் இந்த இயக்கத்தில் இணைந்து.. பார்த்தவரை மரியாதைக்குரிய கே என் லட்சுமணன் அவர்கள்.. அமைதியான முறையில் ஆனால் அதே நேரத்தில் கொள்கை பிடிப்போடு கட்சியை வழிநடத்திக் கொண்டிருந்தார்.. அதற்குப் பின்பு திரு கிருபாநிதி அவர்கள்.. பாரதிய ஜனதா கட்சி மற்ற வகுப்பினருக்கான கட்சிதான் என்ற பொய் பிரச்சாரத்தை உடைத்து, பட்டியலின தலைவராக பட்டி தொட்டி எல்லாம் பாஜகவை கொண்டு செல்ல அடித்தளம் அமைத்தார்.

அதன் பிறகு தலைவரான அண்ணன் சிபி ராதாகிருஷ்ணன் அவர்கள்.. ரத யாத்திரை மேற்கொண்டு.. தமிழகம் முழுவதும்.. உள்ள தொண்டர்களை இணைத்தார்.. அடுத்த தலைவரான. திரு இல கணேசன் அவர்கள்.. கட்சி அமைப்பு ரீதியாக பலப்படுத்த வேண்டும்.. என்று தனது பணியை ஆற்றினார்.. அடுத்த தலைவரான திரு பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள்.. மாநாடுகள் நடத்தி.. தமிழக மக்களிடம் எடுத்துச் செல்ல.. அதற்கடுத்து இந்த இயக்கத்தை வழிநடத்தும்.. மாபெரும் பணியை.. எனக்கு இறைவன் ஒரு வாய்ப்பை தந்தான்.. கிராமம் தோறும் தாமரை மலர வேண்டும் என்பதற்காக.. காலையில் அமைப்பு.. மாலையில் பொதுக்கூட்டம் என்று.. தமிழ் தாமரை யாத்திரை மேற்கொண்டு .. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும் என்ற தாரக மந்திரத்தை.. தமிழகத்தில்.. தடம் பதிக்க ஒரு வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தது.

அடுத்த தலைவரான தம்பி முருகன் அவர்கள்.. வேல் யாத்திரை நடத்தி.. நம் வேலை பாஜகவை பலப்படுத்துவதே என பணி புரிந்தார்.. அடுத்த தலைவராக.. வந்த தம்பி அண்ணாமலை அவர்களின்.. தீவிரமான பணியையும்.. அனைத்து தர மக்களிடமும் குறிப்பாக இளைஞர்களிடம்.. கட்சியை எடுத்துச் சென்றதில்.. மிக முக்கிய பங்காற்றியதில் மட்டுமல்லாமல்.. பாஜகவை பற்றி பேசாமல் தமிழகத்தில் எந்த நிகழ்வும் நடக்காது என்ற நிலைக்கு கொண்டு வந்தார் என்பதை மகிழ்ச்சியோடு பதிவு செய்கிறேன். நான் கட்சியில் இணைந்து பார்த்த தலைவர்களின்.. உழைப்பையும்.. வழிநடத்துதலையும்.. இங்கே பதிவு செய்வதன் மூலம்.. பெருமை அடைகிறேன்..

அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்களை நேரடியாக இல்லையென்றாலும்.. பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே.. ஒரு நாகரிகமான அரசியல்வாதியாக.. கவனித்து வந்திருக்கிறேன்.. தன் பணி மீது உறுதியாக இருந்து.. வெற்றிகளை பெற வேண்டும் என்பதில்.. அருமையாக உழைக்கக் கூடியவர்.. எங்களோடு இணைந்து பணியாற்றும் பொழுது.. அவரது பரந்துபட்டமாநில அரசியலில் உள்ள.. அனுபவத்தை நான் பார்த்திருக்கிறேன்.. இன்று பாஜகவை வழிநடத்தும் ஒரு மாபெரும் வாய்ப்பை பெற்றிருக்கிறார்.. ஒன்றிணைந்து பணியாற்ற கூட்டணி அமைந்திருக்கிறது.. நான் நேற்று குறிப்பிட்டதை போல.. “குளத்தில் தாமரை வட்ட இலையோடு வளரும்.. தமிழகத்தில் தாமரை இரட்டை இலையோடு மலரும்”. அதற்கு அண்ணன் நைனார் நாகேந்திரன் அவர்கள் அடித்தளம் அமைப்பார்கள்.. மரியாதைக்குரிய மோடி என்ற நரேந்திரனின்.. கனவை இந்த நாகேந்திரன் நிறைவுபடுத்துவார். ஒன்றிணைந்து பணியாற்றுவோம்.. வெற்றி பெறுவோம்.. தமிழகத்தில் தாமரை மலர்ந்தே தீரும். இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.