வக்பு சட்டத்தை எதிர்த்து நடைபெற்ற வன்முறை, போராட்ட சம்பவங்களில் மேற்கு வங்க மாநிலத்தில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
வக்பு சட்டத்திருத்த மசோதா, நாடாளுமன்றத்தின் 2 அவைகளிலும் நிறைவேற்றப்பட்டு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்கு அனுப்பப்பட்டது. அதற்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்முவும் ஒப்புதல் அளித்துவிட்டார். இதைத் தொடர்ந்து வக்பு சட்டம் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. இந்நிலையில், இந்த சட்டத்தைஏற்க மறுத்து பல்வேறு முஸ்லிம் அமைப்புகள் நாடு முழுவதும் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருகின்றன. குறிப்பாக மேற்கு வங்கத்தில் இந்தச் சட்டத்தை எதிர்த்து போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில் மேற்கு வங்கத்தில் நடைபெற்ற போராட்டத்தின்போது வன்முறை வெடித்துள்ளது. குறிப்பாக முர்ஷிதாபாத்மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது. இங்கு போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல், அங்குள்ள வாகனங்களை தீயிட்டு கொளுத்தியது. மேலும் போலீஸார் மீதும் கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. இதைத் தொடர்ந்து அந்த கும்பல் முர்ஷிதாபாத்தின் நிம்ரிட்டா ரயில் நிலையத்தை சூறையாடி விட்டு தப்பியது.
இதனிடையே ஜாங்கிபூர் பகுதியில் நடைபெற்ற போராட்டத்தில் குதித்த ஒரு கும்பல் திரிணமூல் காங்கிரஸ் கட்சி எம்பியான காலிலுர் ரஹ்மான் அலுவலகத்தை சூறையாடியுள்ளது.முர்ஷிதாபாத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களின்போது தந்தை, மகன் ஆகிய 2 பேர் உயிரிழந்துள்ளனர். ஜாப்ராபாத்தைச் சேர்ந்த அவர்களது உடல்கள் கத்திக்குத்து காயங்களுடன் காணப்பட்டன. வன்முறைச் சம்பவங்களின்போது அவர்களது வீட்டுக்குள் புகுந்த வன்முறை கும்பல் வீட்டை கொள்ளையடித்த பின்னர் இருவரையும் கத்தியால் குத்திவிட்டு தப்பியோடியுள்ளது.
இதனிடையே வன்முறைச் சம்பவங்களில் ஈடுபட்டதாக 118 பேரை போலீஸார் இதுவரை கைது செய்துள்ளனர். வன்முறைச் சம்பவத்தைத் தொடர்ந்து முர்ஷிதாபாத், ஜாங்கிபூர் பகுதிகளில் போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அங்குள்ள முக்கிய பகுதிகளில் போலீஸார் ரோந்து சுற்றி வருகின்றனர்
வன்முறையில் 3 பேர் உயிரிழந்ததாகவும், போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் உயிரிழந்ததாகவும் மாநில கூடுதல் போலீஸ் டிஜிபி (சட்டம் ஒழுங்கு) ஜாவேத் ஷமிம் தெரிவித்தார். இந்நிலையில் வன்முறை நடந்த முர்ஷிதாபாத், ஜாங்கிபூர் பகுதிகளில் மத்திய படைகளை அனுப்புமாறு கொல்கத்தா உயர் நீதிமன்றத்திலுள்ள சிறப்பு அமர்வு உத்தரவிட்டுள்ளது.