சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் தான் தலித்துகள் தாக்கப்படுகின்றனர்: ஆளுநர் ஆர்.என்.ரவி!

“சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். வேங்கைவயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது” எனப் பேசியுள்ளார் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி.

சட்ட மாமேதை அண்ணல் அம்பேத்கரின் 135-வது பிறந்தநாள் நாடு முழுவதும் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சட்டமேதை அம்பேத்கரின் பிறந்தநாள் விழாவில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார். இந்த நிகழ்வில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியதாவது:-

அம்பேத்கர் தலித் தலைவர் அல்ல, பாரதத் தாயின் மகன். மிகவும் உயர்ந்த, ஆளுமை நிறைந்த மனிதர் அம்பேத்கர். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் மிகவும் கஷ்டப்பட்டவர். கடுமையான உழைப்பால் உயர்ந்தவர். தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சமூக நீதி குறித்து பேசுகின்றனர். சமூக நீதி குறித்து பேசும் தமிழ்நாட்டில் செருப்பு போட்டு செல்வதற்காகவும், இருசக்கர வாகனத்தில் சென்றதற்காகவும் தலித்துகள் தாக்கப்படுகின்றனர். கள்ளக்குறிச்சியில் அதிகார வர்க்கத்துடன் தொடர்புடைய கள்ளச்சாராய மாஃபியாக்களால் பரிதாபமாக தலித் மக்கள் உயிரிழந்தனர். வேங்கை வயலில் மனிதக்கழிவை குடிநீரில் கலந்த இழிவான சம்பவம் இங்கேதான் நடந்தது. இவ்வாறு அவர் பேசினார்.