அண்ணா திமுக- பாஜக கூட்டணி பற்றியோ, அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அதிருப்தி குறித்தோ எதுவும் பேசமாட்டேன்; அனைத்து அரசியல் விவகாரங்கள் குறித்தும் 15 நாட்கள் கழித்துதான் பேசுவேன் என அதிமுகவின் மற்றொரு முன்னாள் அமைச்சரான செல்லூர் ராஜூ எம்.எல்.ஏ. கூறியிருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அதிமுக- பாஜக கூட்டணி அமைந்துவிட்டதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சென்னையில் அறிவித்தார். அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அமித்ஷா இருவரும் கூட்டாக நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில்தான் இது அறிவிக்கப்பட்டது. ஆனால் அதிமுக-பாஜக கூட்டணி தொடர்பாக, அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் கருத்து தெரிவிக்க தொடர்ந்து மறுத்து வருகின்றனர். அதிமுக-பாஜக கூட்டணி குறித்த கேள்விக்கு நேற்று செங்கோட்டையன் எந்த பதிலும் தெரிவிக்கவில்லை. சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், பாஜக கூட்டணியை பற்றி பேசாமல், அதேநேரத்தில் அந்த கூட்டணிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திராவிட பாரம்பரிய குடும்பம் எங்களுடையது; எம்ஜிஆர்- ஜெயலலிதா வழியில் பயணிப்பேன் என்றார். அப்போதும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பெயரை ஜெயக்குமார் கூறவில்லை.
இந்த நிலையில் மதுரையில் இன்று செய்தியாளர்களை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ சந்தித்தார். அப்போது, அதிமுக- பாஜக கூட்டணி குறித்து கேள்வி கேட்கப்பட்டது. உடனடியாக செய்தியாளர்கள் சந்திப்பை முடித்துக் கொண்டு வேகமாக கிளம்பிய செல்லூர் ராஜூ, அரசியல் பற்றி 15 நாட்கள் கழித்து பேசுகிறேன்.. அனைத்தும் பேசுகிறேன் என பூடகமாக கூறிவிட்டு சென்றார். இதனால் அதிமுகவில் பரபரப்பு நிலவுகிறது.