கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் செல்வப்பெருந்தகை பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்க ஒட்டப்பட்ட போஸ்டர்களால் சர்ச்சை ஏற்பட்டது. அதாவது அந்த போஸ்டரில், “ஆட்சியில் பங்கு அதிகாரத்தில் பங்கு! ஏப்ரல் 14ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் 2026இன் துணை முதல்வரே வாழ்த்துக்கள்’ என்ற வாசகம் இடம்பெற்று இருந்தது. இது தமிழக அரசியலில் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கிடையே இது குறித்து செல்வப்பெருந்தகை சில கருத்துகளைக் கூறியுள்ளார்.
சென்னையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அம்பேத்கரின் 135ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை அம்பேத்கரின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும், காங்கிரஸ் கட்சியினருடன் உறுதி மொழி ஏற்றுக் கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கூறியதாவது:-
அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், ஏற்ற தாழ்வு இல்லாத சமூகத்தை உருவாக்குவோம் என அம்பேத்கரின் பிறந்த நாளை முன்னிட்டு உறுதிமொழி ஏற்றிருக்கிறோம். குறிப்பாக அரசியலமைப்புச் சட்டத்திற்கு பாஜக ஆட்சியால் மிகப் பெரிய ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்துத்துவ மேகங்கள் தமிழகத்தைச் சூழ்கிறது. இதையெல்லாம் அழித்து ஒழிக்க அம்பேத்கர் பிறந்த நாளில் அனைவரும் உறுதிமொழி ஏற்போம்.
தமிழகம் அமைதிப் பூங்காவாக இருக்கிறது. இதை மத ரீதியாகவும் சாதிய ரீதியாகவும் யாரும் சீர்குலைக்க அனுமதிக்கக்கூடாது. தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு இந்தியாவில் எங்குப் பிரச்சினை ஏற்பட்டாலும் ராகுல் காந்தி தான் முதல் ஆளாகக் குரல் கொடுத்து வருகிறார்” என்றார்.
தொடர்ந்து 2026ல் தமிழகத் துணை முதல்வர் செல்வப்பெருந்தகை என்ற கேள்விக்குப் பதிலளித்த அவர், “போஸ்டர் ஒட்டியது குறித்து யாருக்கும் உடன்பாடு கிடையாது.. யாரோ ஒருவர் ஆர்வக்கோளாறாக போஸ்டர் ஒட்டியிருக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம்.. நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவர் ஏதோ செய்துவிட்டார் நடவடிக்கை எடுப்பது குறித்துப் பார்க்கலாம் என்றெல்லாம் இல்லை. தவறு தவறுதான். தமிழகத்தை இப்போது மதவாத கருமேகங்கள் சூழ்ந்து இருக்கிறது. அவர்களுக்குத் தெரிந்தோ தெரியாமலோ யாரும் உதவக்கூடாது என்பதில் காங்கிரஸ் தெளிவாக இருக்கிறது. யார் தவறு செய்தாலும் தவறுதான்.. சுவரொட்டி ஒட்டியவர் மீது கண்டனத்தைப் பதிவு செய்திருக்கிறோம்.. விளக்கம் கேட்டுள்ளோம் .. நிச்சயம் நடவடிக்கையும் எடுப்போம். இந்தியா கூட்டணியில் குழப்பத்தை எப்படி ஏற்படுத்தலாம் என்று இங்குச் சிலர் சுற்றிக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால், அவர்களால் ஒரு செங்கல்லைக் கூட இந்தியா கூட்டணியில் எடுக்க முடியவில்லை” என்றார்.
பாஜக அதிமுக கூட்டணியால் திமுகவினருக்கு தூக்கம் போய்விட்டது என்று தமிழிசை சௌந்தரராஜன் கூறிய கேள்விக்கு, “தமிழிசை சவுந்தரராஜனுக்கு தான் தூக்கம் போய்விட்டது. அதனால் தான் அவர் இதுபோல சொல்லி இருக்கிறார்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “வக்பு வாரிய சட்டத்தைப் பொறுத்தவரை ஏற்கனவே உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளோம். ஆளுநர் விவகாரத்தில் எப்படித் தீர்ப்பு பெறப்பட்டதோ அதேபோன்று வக்பு வாரிய திருத்தச் சட்டத்திற்கு எதிராகத் தீர்வு பெறப்படும்” என்றார்.