தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை: சீமான்!

“நான் தனித்துதான் போட்டியிடுவேன். நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என்னுடைய பயணம் என் கால்களை நம்பித்தான். அடுத்தவர்களுடைய கால்களையோ, தோள்களையோ நம்பி எங்களுடைய லட்சியப் பயணம் இல்லை” என்று, நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னையில் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று (ஏப்.14) செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவரிடம், நாதகவும் பாஜக கூட்டணிக்குச் செல்லும் எனக் கூறப்படுவது குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சீமான் கூறியதாவது:-

நீங்கள் என்னைப் பிடித்து தள்ளுகிறீர்கள். எனக்கு யாரும் வழிகாட்டவோ, அறிவுறுத்தவோ அவசியம் இல்லை. எனக்கு சொந்தமாக மூளை இருக்கிறது. சிந்திக்கிற ஆற்றல் இருக்கிறது. நான் என்ன நினைக்கிறேனோ அதைத்தான் செய்வேன். மீண்டும் மீண்டும் அந்த கேள்வியை எழுப்புவதை வெறுக்கிறேன். அருவருப்பாக உணர்கிறேன். நான் தனித்துதான் போட்டியிடுவேன்.

மக்களாட்சியை ஏற்றுக்கொண்ட ஒரு நாட்டில் கடைசி வலிமை அரசியல் அதிகாரம்தான். அம்பேத்கர் போன்ற கல்வியில் சிறந்தவர் உலகில் எவரும் இல்லை. எல்லா துன்ப பூட்டுகளுக்குமான சாவி ஆட்சி அதிகாரம் மட்டுமே என்று அவரே கூறியிருக்கிறார். அதிகாரம் மிக வலிமையானது என்றும் கூறிவிட்டார். அதை நாங்கள் முழுக்க ஏற்றுக் கொண்டுள்ளோம். ஆனால் இன்றைக்கு இருக்கிற திராவிட அதிகாரம் மிகக் கொடுமையானதாக இருக்கிறது. அதை மாற்றுவதற்காக போராடுகிறோம்.

தேர்தலில் தனித்துப் போட்டியிடுவதால், அவர் ஓட்டை இவரும், இவர் ஓட்டை அவரும் பிரிப்பார் என்று கூறுவது பைத்தியக்காரத்தனம். அவர்களது ஓட்டை நான் பிரிக்கிறேன் என்றால், அவர்கள் பலவீனமாக இருக்கிறார்களா? அவ்வளவு வலுவிழந்து இருக்கிறார்களா? எனவே அவ்வாறு பேசக்கூடாது. எங்களுக்கு ஒரு கோட்பாடு இருக்கிறது. ஒரு நோக்கம் இருக்கிறது. ஊழலை ஒழிக்க வேண்டும் என்று அனைவரும் கூறுகின்றனர். யாருடன் கூட்டணி சேர்ந்து ஒழிப்பது? மதுக்கடைகளை மூட வேண்டும் என்கிறார்கள். யாருடன் சேர்ந்து மூடுவது? மது ஆலைகள் வைத்திருக்கும் ஆலை உரிமையாளர்களோடு சேர்ந்து மதுக் கடைகளை மூடுவதா?

நான் தற்காலிக தோல்விக்காக நிரந்தர வெற்றியை இழக்கத் தயாராக இல்லை. என்னுடைய பயணம் என் கால்களை நம்பித்தான். அடுத்தவர்களுடைய கால்களையோ, தோள்களையோ நம்பி எங்களுடைய லட்சியப் பயணம் இல்லை. அடுத்தவர் காலில் நான் பயணித்தால், அது அவர் நினைத்த இடத்துக்கு போகுமே தவிர, என் கனவைச் சுமந்துப் போகாது. சாதி ஒரு மனநோய். ஒவ்வொரு மனிதனின் சிந்தனையில் படிந்திருக்கும் அழுக்கு. அதை அவர்களேதான் கழுவ வேண்டும்.

ஒரு மனிதன், சக மனிதனை தாழ்த்தி வீழ்த்தி சுகம் காண்பதற்கு மனநோய் என்றுதான் பெயர். அது கொஞ்சம் கொஞ்சமாக மாறும். வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைத்தான், சாதியை ஒழிப்பதற்கான கடைசி கருவியாக நாம் தமிழர் கட்சி கருதுகிறது. எல்லோருக்கும் உண்டானது எல்லோருக்கும் கிடைத்துவிட்டால், இந்த ஏற்றத்தாழ்வு செத்து ஒழியும். பொருளாதாரத்தில் மேம்படும்போது, சாதிய ஏற்றத்தாழ்வுகள் சிறுகசிறுக செத்தொழியும். எனவே, சாதியை அப்படித்தான் கொஞ்சம் கொஞ்சமாக ஒழிக்க முடியும். இவ்வாறு அவர் கூறினார்.