இரண்டாவது இடம் யாருக்கு என்பதிலேயே விஜய்க்கும் திமுகவுக்கும் போட்டி: தமிழிசை சவுந்தரராஜன்!

தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி நிச்சயம் வென்று ஆட்சியை அமைக்கும் என பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜகவின் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:-

விஜய் வேற இடையில் களத்தில் இருக்கிறார். அவர் இன்னும் களத்திற்கு வரவில்லை. கூட்டணி அல்லது போட்டியை உறுதி செய்யவில்லை. இதில் அவருக்கும் திமுகவுக்கும் தான் போட்டியாம். ஆம், இரண்டாம் இடம் யாருக்கு என்பதில் அவருக்கும் திமுகவுக்கும் போட்டி இருக்கலாம். அதில் விஜய் கூட இரண்டாம் இடத்திற்கு வரலாம். அதில் ஆச்சரியப்பட எதுவும் இல்லை. நாங்கள் தான் நிச்சயம் முதலிடத்தில் வருவோம். அதில் யாருக்கும் எந்தவொரு சந்தேகமும் வேண்டாம். ஏனென்றால் மக்கள் கொதித்துப் போய் இருக்கிறார்கள். பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துள்ளது. திமுக தொண்டர்கள் பாலியல் குற்றங்களைப் புரிகிறார்கள். திமுக அமைச்சர் பெண்கள் குறித்து மோசமாகப் பேசுகிறார். இப்படி இருந்தால் பெண்கள் வாக்கு ஒன்று கூட இவர்களுக்குக் கிடைக்காது. வேங்கைவயல் மக்களுக்கு இன்னும் நியாயம் கிடைக்கவில்லை. இதனால் பட்டியலின மக்களின் ஆதரவும் இவர்களுக்குக் கிடைக்காது.

வக்பு நிலத்தை நியாயமாக அவர்களுக்கு வழங்கவே சிறுபான்மை மக்களுக்குப் பாரதப் பிரதமர் வக்பு வாரிய சட்டத்தைக் கொண்டு வந்துள்ளார். நாடாளுமன்றத்தில் வக்பு சட்டம் குறித்து விவாதங்கள் நடந்த பிறகு, சிறுபான்மையினர் சமூகங்களே இந்தச் சட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். ஆனால், அதற்கு எதிராக நீங்கள் வழக்கு போடுகிறீர்கள். அரசியலுக்காக இதுபோல எல்லாவற்றையும் செய்து கொண்டு இருக்கிறார்கள். ஆனால், பாஜக அனைத்தையும் மக்கள் அவசியத்திற்காகச் செய்து கொண்டு இருக்கிறது. தாமரைக் குளத்தில் வட்ட இலையோடு வளரும். தமிழகத்தில் இரட்டை இலையோடு தாமரை மலரும். அதை இந்தத் தமிழ்ப் புத்தாண்டில் சபதமாகவே ஏற்றுப் பாடுபடுவோம். தமிழகத்தில் 2026 எங்கள் வசம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

திமுக எந்த சந்தர்ப்பவாதத்தில் காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்தார்கள். இலங்கையில் தமிழர்கள் கொல்லக் காரணமாக இருந்தது காங்கிரஸ் என்று சொன்னவர் திருமாவளவன். அவர் ஏன் காங்கிரஸ் உடன் கூட்டணி வைத்திருக்கிறார். வைகோவும் அதேபோலத் தான். காங்கிரஸ் மட்டுமின்றி ஸ்டாலினுக்கு எதிராகவும் பேசினார். அவர்களின் பழைய பேச்சை எல்லாம் கொஞ்சம் பாருங்கள். இப்போது அவர் எப்படிக் காங்கிரஸ்- திமுக உடன் கூட்டணி வைத்து இருக்கிறார். அதிமுக பாஜக கூட்டணி சாம்சங் தொழிற்சாலை எனப் பல விவகாரங்களில் திமுகவை விமர்சித்த இடதுசாரிகள் இன்னும் அந்தக் கூட்டணியில் தான் இருக்கிறார்கள். பொங்கிப் பொங்கி எழும் வேல்முருகனை அழுத்தி அழுத்தி வைக்கிறார்கள். இப்போது சொல்லுங்கள்.. யாருடைய கூட்டணி சந்தர்ப்பவாதக் கூட்டணி என்று! திமுக கூட்டணி தான் சந்தர்ப்பவாதக் கூட்டணி. அதிமுக பாஜக கூட்டணி என்பது சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணி. அதாவது திமுக தோற்கடிக்கப்பட வேண்டும் என்பது இன்றைய சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பத்திற்கு ஏற்ற கூட்டணியை நாங்கள் அமைத்திருக்கிறோம். இவ்வாறு அவர் கூறினார்.