சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்: முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“சமூகத்தில் நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இன்னமும் எங்களுடைய பழமைவாதமும், பிற்போக்குத்தனமும், அடக்குமுறையும் இருக்கிறது என்று காண்பிக்கின்ற ஆணவம்தான் அந்த பேச்சு” என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் சாடியுள்ளார்.

சென்னையில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெற்ற அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளான சமத்துவ நாள் விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது:-

அடிநாள் தொட்டு அடிமைகளாய், தொழும்பர்களாய், ஆதிக்க சாதிகளின் சவாரிக் குதிரைகளாய், தாழ்த்தப்பட்டோர் அல்லலுற்று தணலிலே மெழுகாய் தவிதவித்துக் கிடந்த நிலை மாற்றிட தகத்தகாய சூரியனாய் எழுந்தான் ஒருவன், அந்த தகைசார்ந்த அறிஞனுக்கு பெயர்தான் அம்பேத்கர் அவர்கள்! மாண்டிடும் புழுக்களாம் மனிதர்களை காத்து, அவர் மீண்டிட போர்க்கொடி உயர்த்திய மேலோன்! புயலாய் சீறி, பூகம்பமாய் குலுங்கி, புரட்சி செய்த புதிய புத்தன்தான் அம்பேத்கர்!” என்று தலைவர் கலைஞர் அவர்களால் போற்றப்பட்ட புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கரின் பிறந்தநாளில் அவரை வணங்கி நான் என்னுடைய உரையை தொடங்குகிறேன்!

சமூக நீதி நாள் இன்று, வரலாற்றுச் சிறப்புமிக்க நாள்! இந்தச் சமூகத்தில் நிலவும் சாதிய ஏற்றத் தாழ்வுகள், தீண்டாமை குற்றங்கள், உள்ளிட்டவற்றுக்கு எதிராக முழங்கி, வரலாற்றை மாற்றி எழுதிய புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள்! அதனால்தான், நம்முடைய திராவிட மாடல் ஆட்சியில், தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்தநாளை, சமூகநீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த இந்த நாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தோம்!

இன்று காலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுத்துக் கொண்டுதான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறோம்! சமத்துவத்தை நோக்கி நம்முடைய சமூகம் வேகமாக நகரவேண்டும் – இந்த மண்ணில் இருக்கின்ற ஒவ்வொருத்தருடைய உள்ளத்திலேயும் மாற்றத்திற்கான சிந்தனை வலுப்பெற வேண்டும் என்று தான், இந்த முன்னெடுப்பை எடுத்திருக்கிறோம்! அம்பேத்கரை கொண்டாடும் திராவிடர் இயக்கம் புரட்சியாளர் அம்பேத்கரை உயர்த்திப் பிடித்து கொண்டாடும் இயக்கம்தான், திராவிட இயக்கம்! அவர் எழுதிய ‘சாதியை ஒழிக்க வழி’ நூலை 1930-ஆம் ஆண்டே தமிழில் வெளியிட்டவர் தந்தை பெரியார் அவர்கள்! அதுமட்டுமல்ல, புரட்சியாளர் அம்பேத்கர் பெயரை, அவர் பிறந்த மகாராஷ்டிர மாநிலத்தில் இருக்கின்ற மராத்வாடா பல்கலைக்கழகத்துக்கு வைக்கம் போராட்டம் நடத்திய காலகட்டத்தில், இந்தியாவிலேயே முதன்முதலாக, தமிழ்நாட்டில் டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டியவர் கருணாநிதி.

இந்த பாதையில்தான், புரட்சியாளர் அம்பேத்கர் நமக்கான அடையாளம் என்று தொடர்ந்து முழங்கிக் கொண்டு இருக்கிறோம்! சமூகநீதி, சமத்துவம், தலித் மக்களின் உரிமைகளுக்காக தொடர்ந்து போராடி வரும் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்களின் பேரன் பிரகாஷ் அம்பேத்கர் அவர்கள், மக்களவையில் இரண்டு முறையும், மாநிலங்களவையில் ஒரு முறையும் பங்கெடுத்து ஒடுக்கப்பட்ட மக்களுக்கான குரலை நாடாளுமன்றத்தில் ஒலித்தவர். அவர் இன்றைக்கு நம்முடைய இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உரையாற்றியதற்கு என்னுடைய இதயமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்த விழாவுக்கு வருவதற்கு முன்னால், சைதாப்பேட்டையில் தமிழ்நாட்டின் தனிப்பெரும் தலைவர்களில் ஒருவராக விளங்கிய எம்.சி.ராஜா அவர்கள் பெயரில் அமைந்திருக்கும் மாணவர் விடுதியை திறந்து வைத்துவிட்டு நான் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்கிறேன். எம்சி ராஜா யார்? சென்னை மாகாண சட்டமன்றத்துக்கு நியமிக்கப்பட்ட உறுப்பினர்களில் முதலாவது உறுப்பினர் எம்.சி.ராஜா அவர்கள். அவர்தான் பட்டியலின மக்களின் துயரங்களை முதன்முதலாக பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் கவனத்திற்குக் கொண்டு சென்றவர். அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் மறைவுக்குப் பிறகு, சென்னை ஆதிதிராவிடர் மகாஜன சபையைச் சீரமைத்து நடத்தியவர். நீதிக்கட்சியை உருவாக்கிய தலைவர்களில் முக்கியமான ஒருவர். 1927-ஆம் ஆண்டே ‘ஒடுக்கப்பட்ட இந்துக்கள்’ என்ற ஆங்கில நூலை எழுதி வெளியிட்டவர். 1937-ஆம் ஆண்டு சென்னை மாகாணத்தின் இடைக்கால அமைச்சரவையில் அமைச்சராக இருந்தவர். அத்தகைய பெருந்தலைவரின் பெயரால் அமைந்திருக்கின்ற அந்த விடுதி, இலட்சியத்துடன் படித்து முன்னேற பாடுபட்டவர்களுக்கான இடமாக இருந்திருக்கிறது!

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வார்கள். இந்த மேடையில் நம்முடைய சகோதரர் திருமாவளவன் அவர்கள் மகிழ்ச்சியுடன் அமர்ந்திருக்கிறார். காரணம் அவரும் அந்த விடுதியில் தங்கிப் படித்தவர் தான். அதை திறந்து வைத்துவிட்டு அந்தக் கட்டிடத்தை சுற்றிப்பார்த்தோம். சுற்றிப்பார்த்த நேரத்தில் தன்னையே மறந்து அவர் சொன்னார் – இங்கே தங்கி, மீண்டும் ஒரு ஐந்து வருடங்கள் படிக்கலாம் போல தோன்றுகிறது என்று சொன்னார். இன்றைக்கு எல்லாருக்கும் அரசியல், சமூக அறிவியல் பாடம் சொல்லித் தருகின்ற சிந்தனையாளராக, கொள்கை பிடிப்புமிக்க அரசியல் தலைவராக அவர் உயர்ந்திருக்கிறார்! இத்தகைய பெருமைக்குரிய விடுதியை திறந்து வைத்திருக்கின்ற இந்த நாளில், அந்த விடுதியில் முகப்புறத்தில் பெருந்தலைவர் எம்.சி.ராஜா அவர்களின் மார்பளவு சிலை மிக விரைவில் வைக்கப்படும் என்பதை மகிழ்ச்சியோடும், பெருமையோடும் நான் இந்த நிகழ்ச்சியில் அறிவிக்கிறேன்.

இன்றைக்கு திராவிட மாடல் ஆட்சியில், எண்ணிலடங்கா சாதனைகளை செய்து கொண்டு இருக்கிறோம்! அதனால்தான், சென்னையில் இருக்கின்ற பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் பயின்றுவரும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களின் எண்ணிக்கை ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே வருகிறது. அந்த மாணவர்களுக்கு இந்த எம்.சி.ராஜா விடுதி பேருதவியாக நிச்சயமாக இருக்கும்! ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சட்டபூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும், தந்தைப் பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் வழியில், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கான நலத்திட்டங்களைச் செயல்படுத்தி சமூகநீதியை நிலைநாட்டுகின்ற அரசாக, நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது!

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் மக்கள்தொகை சதவிகிதத்துக்கு ஏற்ப வழங்கப்படும் நிதியை முழுமையாக பயன்படுத்துவதை உறுதி செய்ய, ‘தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கான மேம்பாட்டு செயல் திட்ட சட்டம் – மாநில ஆணையம்! விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக் குழு ஆகியவற்றைக் கொண்டு வந்திருக்கிறோம்! கிராமப்புறங்களிலும், நகர்ப்புறங்களிலும் இருக்கின்ற, ஆதிதிராவிடர் குடியிருப்புகளில், அடிப்படை வசதிகளை மேம்படுத்துகின்ற வகையில் ஆயிரம் கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட அயோத்திதாச பண்டிதர் குடியிருப்புகள் மேம்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது! சமூக நல்லிணக்கம், சாதிப் பாகுபாடற்ற சமூக ஒற்றுமையை கடைபிடிக்கும் கிராமங்களை ஊக்குவிக்கின்ற வகையில், பத்து கிராமங்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பத்து இலட்சம் ரூபாய் வீதம் நிதி வழங்கப்பட்டிருக்கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில், பத்து கிராம பஞ்சாயத்துகளுக்கு தலா ஒரு கோடி ரூபாய் வீதம் உயர்த்தி சமூக நல்லிணக்க விருது உயர்த்தி வழங்க அறிவித்திருக்கிறோம்! கடந்த நான்கு ஆண்டுகளில், சமூக நீதி மற்றும் சமத்துவ சிந்தனைகள் குறித்து ஆறாயிரத்து 977 விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டிருக்கிறது.

ஆண்டுதோறும் திருவள்ளுவர் நாளன்று, ‘டாக்டர் அம்பேத்கர் விருது’ வழங்கப்பட்டு வருகிறது. இது எல்லாவற்றிற்க்கும் முத்தாய்ப்பாக இந்த அரங்கிற்கு வந்திருக்கின்ற மாணவர்களை பார்க்கிறேன்… “அண்ணல் அம்பேத்கர் அயலக கல்வி உதவித்தொகை” திட்டத்தின்கீழ், வெளிநாடுகளில் முதுகலை மற்றும் ஆராய்ச்சிப் படிப்புகளை மேற்கொள்ளும் இந்த 174 மாணவர்களும்தான் என்னுடைய மகிழ்ச்சிக்கு காரணமாக அமைந்திருக்கிறது! ஏனென்றால், இது திராவிட மாடல் ஆட்சியின் சாதனை! ஒரு சமூகத்தின் முன்னேற்றம் என்பது, அந்தச் சமூகத்தில் இருக்கின்ற மாணவர்களை நாம் எவ்வளவு கண்ணுங்கருத்துமாக பார்க்கிறோம் என்பதில்தான் இருக்கிறது! அதற்கு இங்கே வந்திருக்கக்கூடிய மாணவர்களே சாட்சி! நாம் மாணவர்களின் கல்விக்காக பல திட்டங்களை செயல்படுத்துவது மட்டுமல்ல, அதிக எண்ணிக்கையில் விடுதிகளையும் கட்டியிருக்கிறோம்! ஆதி திராவிட மகளிருக்கான ‘நன்னிலம்’ திட்டம் மாணவர்களுடைய முன்னேற்றம் என்பது கண்கள் மாதிரி என்றால், பெண்களுடைய முன்னேற்றம் என்பது இதயத்துடிப்பு மாதிரி! அதைத்தான் புரட்சியாளர் அம்பேத்கர் அவர்கள், “ஒரு சமூகத்தின் முன்னேற்றத்தை அந்த சமூகத்தில் உள்ள பெண்களின் முன்னேற்றத்தை வைத்தே அளவிடுகிறேன்” என்று சொன்னார். அதனால்தான், பெரிதும் விவசாயத் தொழிலாளர்களாக இருக்கின்ற ஆதிதிராவிட மகளிரை நில உடைமையாளர்களாக மாற்றி, அவர்களுடைய சமூக நிலை மற்றும் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற நோக்கத்துடன், “நன்னிலம்” என்ற ஆதிதிராவிடர் மகளிருக்கான நிலம் வாங்கும் திட்டத்தை இன்றைக்கு செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம். நில உடைமையாளராகவும் மகளிர் கடந்த இரண்டு ஆண்டுகளில், 625 பயனாளிகளுக்கு முப்பது கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டு, மகளிரை நில உடைமையாளர்களாக நம்முடைய அரசு மாற்றியிருக்கிறது என்பதை மகிழ்ச்சியுடனும், பெருமையுடனும் நான் சொல்ல விரும்புகிறேன்.

அதுமட்டுமல்ல, நம்முடைய அரசின் முத்திரை திட்டமான மகளிருக்கான கட்டணமில்லா விடியல் பயணத் திட்டத்தில் அதிகம் பயனடையக் கூடியவர்கள் நம்முடைய ஆதிதிராவிடர் சமூகத்தைச் சார்ந்த சகோதரிகள் தான். பெண்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், வளர்ச்சிக்கான அடிப்படை வருமானம் ஈட்டுகின்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளவும், தாட்கோ மூலம் வழங்கப்படுகின்ற மானியத்தை 2023-ஆம் ஆண்டு முதல் இரண்டு இலட்சத்து 50 ஆயிரத்தில் இருந்து, ஆறு இலட்சம் ரூபாயாக உயர்த்தியிருக்கிறோம். அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம் பொருளாதார முன்னேற்றத்திற்காக நான் தொடங்கி வைத்த ‘அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தில்’ மூவாயிரத்து 950 தொழில் முனைவோருக்கு 630 கோடி ரூபாய் கடனுதவி வழங்கி இருக்கிறோம். அதில் மானியம் மட்டுமே 403 கோடி ரூபாய்! இதில் பயனடைந்திருக்கின்ற பெண் தொழில் முனைவோருடைய எண்ணிக்கை மட்டும் 1000 பேர்!

அதோடு தூய்மைப் பணியாளர்களின் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான ‘தொழில் முனைவு’ திட்டத்தின்கீழ் 468 பயனாளிகளுக்கு 89 கோடியே 71 இலட்சம் ரூபாய் மானியம் வழங்கப்பட்டிருக்கிறது. பழங்குடியின மக்களுடைய வாழ்வாதார திட்டங்களுக்காக ஆண்டுக்கு 250 கோடி ரூபாய் வீதம், நான்கு ஆண்டுகளில் ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் ‘தொல்குடி’ என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ஜாதிய ஏற்றத் தாழ்வுகள் தகர்ப்பு இன்றைக்கு சமத்துவ நாளைக் கொண்டாடுகின்ற இந்தத் தருணத்தில், நான் உறுதியோடு சொல்லிக் கொள்ள விரும்புவது, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் ஒளிமயமான முன்னேற்றத்திற்கு நம்முடைய திராவிட மாடல் அரசு எப்போதும் துணைநிற்கும். சாதியின் பெயரால் தொடக்கூடாது, கண்ணில்படக்கூடாது, தெருவில் நடக்கக்கூடாது, கோயிலுக்குள் நுழையக் கூடாது என்பதையெல்லாம் நம்முடைய கொள்கைகளால், போராட்டங்களால், இடைவிடாத பரப்புரைகளால் உடைத்து நொறுக்கிவிட்டோம்!

கல்வியும், படிப்பும், வேலையும், பதவியும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கையில் அதிகாரம் செலுத்தும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறது. இதுதான் திராவிட இயக்கம் ஏற்படுத்தியிருக்கக்கூடிய மாற்றம். கல்வி, வேலைகள், அரசாங்கம், அதிகாரம், நிர்வாகம், அறிவு என்று எல்லாமே ஜனநாயகமயமாக ஆகிவிட்டது. இந்த முன்னோக்கிய பாய்ச்சலில்தான் சமூகமும், ஜனநாயகமயமாகும். சாதிதான், தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! அந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம். நாம் அனைவரும் தமிழர்கள் என்று உணர வைப்பதுதான் நம்முடைய நோக்கம்! முன்னோடி அரசாங்கம் ஒடுக்கப்பட்டோரின் கல்வி, சமூக, பொருளாதார உயர்வுக்கான அனைத்து உரிமைகளையும் நம்முடைய திராவிட மாடல் அரசு இன்றைக்கு வழங்கி வருகிறது. இதற்கு முன்னால் இருந்த எந்த ஆட்சியிலேயும் இல்லாத சாதனைகள், இந்த திராவிட மாடல் ஆட்சியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது! இன்னும் பெருமையோடு சொல்ல வேண்டும் என்றால், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் முன்னேற்றத்திற்கு திட்டங்களை வழங்குவதில், நிதி வழங்குவதில், தொழில் முனைவோர்களை உருவாக்குவதில், மாணவர்களை உயர்கல்விக்காக வெளிநாட்டுக்கு அனுப்புவதில், வன்கொடுமைகளை குறைத்ததில், சமூக, சமத்துவத்தை நிலைநாட்டுவதில், நம்முடைய திராவிட மாடல் ஆட்சிக்காலம்தான் பொற்காலம் என்பதை நெஞ்சை நிமிர்த்தி நான் சொல்ல முடியும்!

“ஆதிதிராவிடர்களுக்கு நலத்திட்ட உதவி செய்வதோடு நம்முடைய அரசினுடைய கடமை முடிந்துவிட்டதாக நான் கருதவில்லை. சுயமரியாதை சமதர்மச் சமூகத்தை உருவாக்குவதற்கு இன்னும் நெடுந்தூரம் பயணிக்க வேண்டும்” என்று இதைத்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். நம்முடைய பாதையும், பயணமும் மிக நீண்டது. என்னைப் பொறுத்தவரைக்கும், மகாத்மா ஜோதிபா ஃபுலே – புரட்சியாளர் அம்பேத்கர் – தந்தை பெரியார் – பேரறிஞர் அண்ணா – முத்தமிழறிஞர் கலைஞர் போன்ற தலைவர்கள் உருவாக்க பாடுப்பட்ட, சாதிய ஏற்றத்தாழ்வுகள் இல்லாத சமத்துவச் சமுதாயத்தை அமைக்க வேண்டும்! சமூக மாற்றம் தேவை இதற்கான மாற்றம் தனிமனிதர்களில் தொடங்கி, சமூகத்தின் ஒட்டுமொத்த எண்ணமாக வெளிப்படவேண்டும்! அப்போதுதான், ஆயிரம், ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணிலேயும், மக்களுடைய எண்ணத்திலேயும் இருக்கின்ற ஏற்றத்தாழ்வுகளை நீக்க முடியும்! ஆயிரக்கணக்கான ஆண்டுகள் கொண்ட வரலாற்றை கடந்து நூறு, இருநூறு ஆண்டுகளாக நாம் அடைந்திருக்கின்ற வளர்ச்சியும், வெற்றியும், சமூக மாற்றமும், கொஞ்சம்தான்! வெறுப்பு அரசியலைவிட அன்பு அரசியல் நமக்குள்ளே ஏற்பட்டிருக்கின்ற முற்போக்கு, சமத்துவ எண்ணங்களும், சிந்தனைகளும் எல்லோரிடமும் ஏற்படவேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்கவேண்டும். வெறுப்பு அரசியலைவிட அன்பை விதைக்கும் அரசியல்தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என்று நான் உளப்பூர்வமாக நம்புகிறேன்!

தமிழ் – தமிழர் என்ற உணர்வுதான் நம்மை ஒன்றிணைக்கும்! நம்முடைய பாதையில் இடர்கள் ஏற்படும் – ஏற்படுத்தப்படும் – அதையெல்லாம் உணர்ந்துதான் நம்முடைய உழைப்பைக் கொடுக்க வேண்டும்! அதைத்தான் தந்தை பெரியார் – புரட்சியாளர் அம்பேத்கர் முதலானோர் செய்தார்கள். எதிரிகளையும் – எதிரிகளின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொண்டாலே, அந்தத் தடைகளை உடைப்பது எளிதாகிவிடும். இந்தச் சமூகத்தில் ஆங்காங்கே நடைபெறுகின்ற ஒரு சில பிற்போக்குத்தனமான செயல்களைக் காட்டி, இதுதான், பெரியார் மண்ணா? இதுதான், அம்பேத்கர் மண்ணா? என்று நீலிக்கண்ணீர் வடிக்கிறவர்களின் எண்ணம் என்ன தெரியுமா? இந்த மண்ணில் இந்தக் கொடுமைகள் இன்னும் தொடர்கின்றதே என்ற கவலை கிடையாது. அவர்களுடைய எண்ணம் “நீங்கள் மாற்றத்தை விதைத்துவிட்டதாக, பண்படுத்திவிட்டதாக பெருமைப்படுகின்ற மண்ணில் இன்னமும் எங்களுடைய பழமைவாதமும், பிற்போக்குத்தனமும், அடக்குமுறையும் இருக்கிறது” என்று காண்பிக்கின்ற ஆணவம்தான் அந்த பேச்சு! நம்முடைய உழைப்பால், சமூகத்தில் எஞ்சியிருக்கின்ற அந்தக் கொடுமைகளையும் நிச்சயம் களையெடுப்போம்! சமூகப் பணிகளாலும், சட்டப் பணிகளாலும் சமத்துவத்தை நோக்கிய நகர்வுகளை நாம் சாத்தியப்படுத்தி ஆகவேண்டும். அதற்கு, தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம்! பொது உடைமை, சமத்துவம், சமூகநீதி கொண்ட சமுதாயத்தை உருவாக்க புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளில் மதவெறியை மாய்த்து மனிதநேயம் காப்போம்! ஜெய் பீம்! இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் பேசினார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்றைய பேச்சின் முடிவின் ஜெய்பீம் என முழக்கமிட்டார். அண்மையில் மாணவர்களிடையே பேசிய தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, ஜெய் ஶ்ரீராம் என முழக்கமிட்ட சொன்னது பெரும் சர்ச்சையானது. இந்த பின்னணியில் ஆளுநர் ரவிக்கு பதிலடி தருவது போல ஜெய்பீம் என முதல்வர் முழக்கமிட்டதாகவும் கருதப்படுகிறது.