மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானத்தை சட்டசபையில் முதலமைச்சர் இன்று கொண்டு வர இருக்கிறார்.. மாநில உரிமைகள் தொடர்பான விவாதங்கள் தேசிய அளவில் எழுந்துள்ள நிலையில், மத்திய அரசு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு அநீதி இழைத்து வருவதாக தொடர்ந்து குற்றம்சாட்டப்பட்டு வரும் சூழலில், தமிழக சட்டமன்றத்தில் ஸ்டாலின் கொண்டு வரப்பட உள்ள இந்த தீர்மானம் மிகுந்த முக்கியத்துவத்தை பெற்று வருகிறது.
மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்பது திமுகவின் ஐம்பெரும் முழக்கங்களில் ஒன்றாக இருந்து வருகிறது. இந்த மாநில உரிமைகளை திமுக விட்டுத்தராமல் போராடியும் வருகிறது. எனினும் ஆனால், அவரவர் மாநில விவகாரத்தில் மத்திய அரசு மூக்கை நுழைப்பதை விரும்பவில்லை. குறிப்பாக, நீட் விவகாரம், மொழிக் கொள்கை, நிதி பகிர்ந்தளிப்பு, பேரிடர் நிவாரணம், என மத்திய பாஜகவின் ஒவ்வொரு செயல்பாடும் திமுகவுக்கு அதிருப்தியையும், ஏமாற்றத்தையும் உண்டுபண்ணி விடுகிறது. அதிலும், ஆளுநர்களை வைத்து, மாநில அரசுகளை செயல்படவிடாமல் நடத்துவதையும் திமுக கடுமையாக விமர்சித்து வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், மாநில உரிமைகளை நிலைநாட்டக் கூடிய வகையில் விரைவில் புதிய அறிவிப்பை வெளியிடுவதாக, கடந்த மார்ச் 25ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
“இந்த மொழி திணிப்பின் மூலமாக மாநிலங்களை, மாநில மொழிகளை, ஒரு இனத்தை ஆதிக்கம் செலுத்த நினைக்கின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும். மாநிலங்களை தங்களது கொத்தடிமை பகுதிகளாக நினைப்பதால்தான் இப்படியெல்லாம் மொழித் திணிப்புகளும், நிதி அநீதிகளையும் செய்கின்றனர். அதனால், நாட்டின் கூட்டாட்சி தன்மையை காக்கவும், மாநிலங்களின் சுயாட்சியை மீட்டெடுக்கவும் சரியான முன்னெடுப்புகளை செய்ய வேண்டிய கட்டாயத்தில் நாம் உள்ளோம். மாநில சுயாட்சியை உறுதி செய்து, மாநில உரிமைகளை நிலைநாட்டினால்தான் தமிழ்மொழியையும் காக்க முடியும், தமிழினத்தையும் உயர்த்த முடியும் என்பதை உறுதிபடத் தெரிவித்து, அதற்கான அறிவிப்புகளை விரைவில் வெளியிடுவேன்” என்று தெரிவித்திருந்தார்.
அதன்படியே, இன்று தமிழக சட்டப்பேரவையில் மாநில சுயாட்சி தொடர்பான தீர்மானம் தாக்கல் செய்யப்பட உள்ளது.. மாநிலங்களுக்கு அதிக அதிகாரம் வழங்க வலியுறுத்தும் வகையில் இந்த தீர்மானம் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. 5 நாள் தொடர் விடுமுறைக்கு பிறகு, இன்று தமிழக சட்டசபை மீண்டும் கூடுகிறது. காலை 9.30 மணிக்கு முதலில் கேள்வி நேரம் எடுத்துக்கொள்ளப்படுகிறது. கேள்வி நேரம் முடிந்ததுமே, செய்தி மற்றும் விளம்பரம், எழுதுபொருள் மற்றும் அச்சு, தமிழ் வளர்ச்சி, மனிதவள மேலாண்மைத் துறை மீதான மானிய கோரிக்கை விவாதம் நடைபெறுகிறது. உறுப்பினர்களின் வாக்கெடுப்பு விவாதத்தில் பங்கேற்று பேசும் உறுப்பினர்களின் கேள்விகளுக்கு துறை சார்ந்த அமைச்சர்கள் பதிலளிப்பார்கள். பிறகு மாநிலங்களுக்கு அதிக அதிகாரங்கள் வழங்க வலியுறுத்தும் வகையில், மாநில சுயாட்சி தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தீர்மானம் கொண்டு வந்து முன்மொழிந்து பேசவுள்ளார். அதன்பிறகு சட்டமன்ற உறுப்பினர்கள் தீர்மானத்தின் மீது பேசுவார்கள். இறுதியாக உறுப்பினர்களின் வாக்கெடுப்புக்குப் பிறகு அது நிறைவேற்றப்பட உள்ளது.. இந்த மாதம் 29-ந்தேதி வரை சட்டசபை கூட்டம் நடக்க உள்ளது குறிப்பிடத்தக்கது.