துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கும் இடையே மோதல் முற்றியுள்ள நிலையில், மல்லை சத்யாவுக்கு எதிராக திருச்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்நிலையில், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி யாரும் செயல்படக் கூடாது என நிர்வாகிகளுக்கு வைகோ அறிவுறுத்தி உள்ளார்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வைகோவுக்கு கட்சியின் முதன்மை செயலாளர் பதவி வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, கட்சியின் முக்கிய நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பலர் அதிருப்தியால் கட்சியில் இருந்து வெளியேறினர். இந்நிலையில், துரை வைகோ பொறுப்பேற்ற நாள் முதல் அவரது ஆதரவாளர்கள் மல்லை சத்யாவுக்கு எதிராக செயல்பட்டு வருவதாகவும், கட்சி நிகழ்ச்சிகளில் அவரது பெயரை பேனர், போஸ்டர்களில் பயன்படுத்தக் கூடாது என கட்டுப்பாடுகள் போட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
தொடர்ந்து, இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நிகழ்ந்ததால், துரை வைகோவுக்கும், மல்லை சத்யாவுக்கு இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. பின்னர், அதுமோதலாக உருவெடுத்து, தற்போது உச்ச கட்டத்தை அடைந்துள்ளது. சில தினங்களுக்கு முன்பு திருச்சியில் நடைபெற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் மல்லை சத்யாவை கட்சியில் இருந்து நீக்க வேண்டும் என, துரை வைகோ ஆதரவாளர்கள் தீர்மானத்தை நிறைவேற்றினர்.
இந்த சூழ்நிலையில், கடந்த 12-ம் தேதி சென்னை தாயகத்தில் கட்சியின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அப்போது, நிர்வாகிகள் நியமனத்தில் முறைகேடு நடந்திருப்பதாக சிலர் குற்றம்சாட்டி, நிர்வாகிகள் ஒருவருக்கொருவர் வைகோ முன்னிலையில் வார்த்தை மோதலில் ஈடுபட்டனர். அப்போது கூட்டத்தில் இருந்து துரை வைகோ கோபமாக வெளியேறினார்.
இந்நிலையில், துரை வைகோ ஆதரவாளர் சத்யகுமரன், ‘மதிமுகவில் 30 ஆண்டுகள் அல்ல, 300 ஆண்டுகள் உழைத்திருந்தாலும், ஈ.வெ.ரா., அண்ணா, வைகோ, துரை வைகோ மட்டுமே மதிமுகவின் அடுத்த பரிணாமம். இதை ஏற்பவர்கள் இருக்கலாம். மறுப்பவர்கள் உடனே வெளியேறலாம். இது துரை வைகோ காலம்,’ என அறிக்கை வெளியிட்டார்.
இதற்குப் பதிலடி கொடுத்த மல்லை சத்யா, ‘மதிமுகவில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினி வேஷம், வெளியேறுங்கள் என்ற விருதுகளை எனக்கு தந்துள்ளனர். எனக்கு அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத்தன்மையை வைகோ அறிவார். ஒருசிலர் எனக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரலாம். ஆனால், வைகோவின் இதயத்தில் இருந்து என்னை நீக்க எந்த சக்தியாலும் முடியாது. நம்பி கெட்டான் சத்யா என்று வேண்டுமானால் அரசியல் உலகம் என்னை சொல்லலாம். ஆனால் நம்பிக்கை துரோகம் செய்தான் மல்லை சத்யா என்று ஒரு போதும் வரக்கூடாது என்ற உறுதியோடு மதிமுகவில் பயணிக்கிறேன். சமூக வலைதளங்களில் என் படம், பெயர் போட்டு பதிவிடுபவர்களுக்கு நானே பதில் கொடுக்கிறேன். இந்த விவகாரத்தில் யாரும் தலையிட வேண்டாம்,’ என சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
இதற்கிடையே, திருச்சியில் மல்லை சத்யாவுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தைக் கண்டித்து வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், ‘மதிமுக நிர்வாகக்குழு கூட்டம் ஏப்.20-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாவட்ட கழகங்கள் கூட்டத்தை கூட்டி தீர்மானங்கள் நிறை வேற்றி உள்ளனர். கட்சியின் கட்டுப்பாட்டுக்கு எதிராக இத்தகைய கூட்டங்கள் நடத்துவது, தீர்மானங்கள் நிறைவேற்றுவது கூடாது’ என குறிப்பிட்டுள்ளார்.