நயினார் நாகேந்திரன் 29 பைசா தருவதையே பெருமையாகச் சொல்கிறார்: அமைச்சர் ரகுபதி!

அவர்களுக்கு தெரிந்திருக்கிறது – இன்றைக்கு மாநில சுயாட்சி மாநிலத்தில் உரிமைகளை காப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்பது. எனவேதான், தெரிந்தே இன்றைக்கு அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள் என்று அமைச்சர் ரகுபதி கூறினார்.

இதுகுறித்து அமைச்சர் ரகுபதி கூறியதாவது:-

மாநில அரசுகளின் உரிமைகளை எல்லாம் மீட்டெடுக்கின்ற வண்ணம் ஒன்றிய மாநில அரசினுடைய உரிமைகளை எந்தெந்த உரிமைகளை மாநில அரசு இன்றைக்கு பெற்றுக் கொள்ளலாம் என்பதை எல்லாம் ஏற்கனவே பல்வேறு குழுக்கள் அமைக்கப்பட்டு ஆராய்ந்து இருந்தாலும், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒரு புதிய கமிட்டியை நிர்ணயித்திருக்கிறார்கள்.

ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஜோசப் மரியாதைக்குரிய அசோக் வர்தன் செட்டி, மரியாதைக்குரிய நாகநாதன் ஆகியோர் கொண்ட குழு, நம்முடைய ஒன்றிய அரசு, மாநில அரசுக்கான உரிமைகளைப் பற்றியும் நாம் எந்தெந்த விதங்களில் எல்லாம் பாதிக்கப்பட்டு இருக்கிறோமோ, அந்த பாதிப்புகளை எடுத்துக் கூறுகின்ற வண்ணம் இந்த கமிட்டி பரிசீலிக்கும்.

ஏற்கனவே, ராஜமன்னார் கமிட்டி பல்வேறு பரிந்துரைகளை தந்திருக்கிறது. அதனடிப்படையில். தமிழ்நாடு அரசு பல்வேறு கோரிக்கைகளை சொல்லி இருந்தாலும் கூட ஒன்றிய அரசு அதற்காக பூஜ் கமிட்டி, சர்க்காரியா கமிஷன் போன்றவற்றையெல்லாம் அமைத்திருந்தார்கள். ஆனால், இந்த கமிட்டிகள் அமைக்கப்பட்டிருக்கிறதே தவிர, நம்முடைய மாநில உரிமைகளை மீட்டெடுக்கப்படவில்லை.

இன்றைக்கு கல்வியிலே நம்முடைய உரிமைகள் concurrence list-ல் இருக்கின்ற காரணத்தால், நம்மை அவர்கள் கலந்தாலோசித்து செய்ய வேண்டிய எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் கூட இன்றைக்கு அவர்கள் எடுக்கவில்லை. கல்விக்குரிய தொகையை நாம் மும்மொழி திட்டத்தை அறிமுகப்படுத்த முடியாது என்று சொன்னதால், நமக்கு தரவேண்டிய தொகையை இன்றைக்கு ஒன்றிய அரசு தர மறுக்கின்றது.

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில், ஒரு 3, 4 மாதங்களுக்கான அந்த தொகை 100 நாள் வேலைவாய்ப்பு பணியாளர்களுக்கு தரப்படாமல் இருக்கிறது. அதேபோல, நாம் கொடுக்கின்ற அந்த ஒன்றிய அரசுக்கான அந்த ஜிஎஸ்டி நிதி பகிர்வு என்பது 29 பைசாவாகவே இருக்கிறது. இன்றைக்கு பீகாருக்கோ, உத்தரபிரதேசத்திற்கோ நீங்கள் 1 ரூபாய் வரிக்கு எந்த அளவுக்கு அதிகமாக கொடுக்கிறீர்களோ, எங்களுக்கு அந்த அளவுக்கு வேண்டாம். நாங்கள் ஒரு ரூபாய் கொடுக்கின்ற பொழுது, எங்களுக்கு 50 பைசாவையாவது திருப்பித் தாருங்கள் என்பதுதான் நம்முடைய கோரிக்கை.

அதேபோல இன்றைக்கு சட்டமன்றத்தில், பாரதிய ஜனதா கட்சியின் தலைவராக பொறுப்பேற்று இருக்கக்கூடிய நயினார் நாகேந்திரன் அவர்கள் 29 பைசா தருவதையே பெருமையாகச் சொன்னார். ஆனால், அவர் பீகாருக்கும், உத்திரப் பிரதேசத்திற்கும் என்ன கொடுக்கிறோம் என்பதை அவர் சொல்ல தவறிவிட்டார்.

எனவே, எந்தெந்த வகையில் நாம் வஞ்சிக்கப்பட்டிருக்குமோ அதிலிருந்து மீட்டெடுப்பதற்காகவும், நம்முடைய உரிமைகள் எல்லாம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்காகவும், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இந்த கமிட்டியை இன்றைக்கு நியமித்திருக்கிறார்கள். அதனுடைய பரிந்துரைகளின் அடிப்படையில் நாம் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு, நம்முடைய மாநில உரிமைகளை மீட்டெடுக்க கடமைப்பட்டிருக்கின்றோம்.

பிரதான எதிர்கட்சியான அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வழக்கம்போல வெளிநடப்புச் செய்துவிட்டார்கள். தமிழ்நாடு மக்களுடைய உரிமைகளில், மாநில சுயாட்சியில், மாநிலத்திற்கான அதிகாரங்கள் நாம் பெறுவதில் அவர்களுக்கு என்றைக்குமே அக்கறையில்லை. புதிய எஜமானர்களின் கட்டளைப்படி இன்றைக்கு அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள்.

அதற்கான பொய்யான காரணங்களை அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். எல்லோருக்கும் அந்த 110 விதி முடிந்த பிறகு பேச வாய்ப்பு தருகிறேன் என்று சட்டப் பேரவைத் தலைவர் சொன்ன பிறகும்கூட – எங்கள் கோரிக்கையை நீங்கள் முதலில் கேட்க வேண்டும் அப்போதுதான் முதலமைச்சர் 110 விதியின் கீழ் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று சொல்லி சத்தம் போட்டு விட்டு, வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். ஏனென்றால், அவர்களுக்கு தெரிந்திருக்கிறது – இன்றைக்கு மாநில சுயாட்சி மாநிலத்தில் உரிமைகளை காப்பதற்காக தீர்மானம் கொண்டு வரப் போகிறோம் என்பது. எனவேதான், தெரிந்தே இன்றைக்கு அவர்கள் வெளிநடப்பு செய்து இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.